கவிதைகளில் ஆபாசம் ஏன்?
எனக்கு ஒரு சந்தேகம் இருக்குதுங்க. இது இன்னிக்கு நேத்து வந்த சந்தேகமில்லங்க நெடுங்காலமா இருக்குங்க. அது என்னன்னு கேக்குறீங்களா?
அதாவது, கட்டுரைகளில் யாராவது ஆபசமாக எழுதினால் எல்லாரும் வரிஞ்சு கட்டிக்கொண்டு வந்து எழுதினவரை உண்டு இல்லைன்னு ஆக்கிவிடுகிறோம். ஆனால், அதே மாதிரியான எழுத்துக்களை ஒருவர் கவிதையாக எழுதினால் மட்டும் சமூகம் கைதட்டி ரசிக்கிறது? அது ஏன்?
நமது வலைப்பதிவுகளிலேயே நான் இதை கண் கூடாக பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் யாரும் உடலுறவை பற்றியோ, மறைவான உடலுறுப்புகளை குறிக்கும் சொற்களை பயன்படுத்தியோ யாரும் கட்டுரையாக எழுதுவதில்லை. தவறி எழுதினாலும் சுட்டிக்காட்டப்படுகிறார் எழுதியவர். ஆனால், இங்கே (மட்டுமல்ல பொதுவாகவே) எழுதும் பல கவிதைகளில் சரளமாக உடலுறுப்புகளை பேச்சு வழக்கிலான சொற்களைப் பயன்படுத்தியே எழுதுவது, உடலுறவைப் பற்றி எழுதுவதை காணலாம்.
சில மாதங்களுக்கு முன் ஒரு பதிவர் முதலிரவில் நடக்கும் உறவைப்பற்றி விலாவாரியாக கவிதை என்ற பெயரில் எழுதியிருந்தார் (பதிவர் பெயர் மற்றும் அவருடைய வலைப்பதிவின் பெயர் எதுவும் ஞாபகமில்லை).அதற்கான பாராட்டுக்கள் குவிந்தன. பாராட்டியதோடு மட்டுமில்லாமல் சிலர் அந்த திருமணமாகாத பதிவருக்கு 'மனைவின் தேவையறிந்து / கேட்டறிந்து நடந்து கொள்ளுங்கள்' என்ற அறிவுரைகள் வேறு. கவிதைகளில் மட்டுமில்லை, கவிதை போன்ற நடையில் வரும் உரைநடைகளில் கூட இது போன்றவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இது பொல் முதலிரவில் நடப்பவற்றை ஒருவர் உரைநடையாக எழுதி பொதுவில் வைக்கமுடியுமா? மஞ்சள் பத்திரிக்கை என ஒதுக்கப்பட்டு விடாது? ஏன் இந்த இரட்டை நிலை?
கவிதை வடிப்பதற்கு கண்டிப்பாக தனித்திறமை பெற்றிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. கவிஞர்களுக்குள்ள கற்பனை வளத்தை கண்டு வியக்காதவர் யாருமிலர். ஆனாலும், இது போன்றவற்றை கவிதைகளில் எழுதுவதன் மூலம் என்ன தனித்துவம் வந்துவிடுகிறது. அதையும் சமூகத்தால் எப்படி பாராட்ட முடிகிறது? இப்படி எழுதுவது நாகரீகமல்ல என்பன போன்ற விமர்சனங்கள் அவைகளுக்கு பொருந்தாதது ஏன்?
இதுதாங்க எனக்குள்ள ஐயம். ஒருவேளை இதற்கான காரணங்கள் இருக்கலாம். அதை தெரிந்து தெளிந்து கொள்ளத்தான் இங்கு என்னுடைய ஐயத்தை பதிந்தேன்.
என்னைப்பொறுத்தவரை, இவ்வகையைச் சார்ந்தவற்றை எந்த வடிவில் எழுதினாலும் ஆபாசமே. இரண்டாம் தரமே.









