Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Wednesday, June 27, 2007

Desert Safari - நாங்களும் படம் காட்டுவோம்ல

கடந்த டிசம்பர் 31-ந்தேதி கடும் குளிர் நேரத்தில் நான் குடும்பத்துடன் டெஸர்ட் ஸஃபாரி சென்றது ஜெஸிலாவின் நேற்றைய பதிவை பார்த்தவுடன் ஞாபகம் வந்தது. எனது 9 ஆண்டு துபை வாழ்க்கையில் அதுதான் நான் சென்றிருந்த முதல் பாலைவனப் பயணம். மீண்டும் மீண்டும் செல்லத்தூண்டும்படி அமைந்தது. அதற்குப் பின் இதுவரை வாய்ப்பு அமையவில்லை. வாய்ப்புகளை உருவாக்கவேண்டும் இனி. அப்படியொரு புது விதமான அனுபவம் அது. அதை உங்களுடன் சொற்களால் பகிர்ந்துகொள்வதை விட எனது கேமராவில் பதிந்து வைத்ததை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. ஜெஸிலாவின் நேற்றைய பதிவிலேயே அதைப் பற்றி நிறைய தகவல்கள் அறிய கிடைப்பதால் நான் படம் காட்டுவதோடு நிறுத்திக்கொள்கிறேன். (படம் காட்டுறதுலதான் நாம கில்லாடியாச்சே). புகைப்படம் எடுப்பதிலும் கொஞ்சம் ஆர்வம் அதிகம். அதுவும் ஒரு காரணம்.

அமீரகத்தில் இல்லாதவர்களுக்கு கொஞ்சம் எளிதில் புரிந்து கொள்வதற்காக 'கூகிள் புவி'யின் படத்துடன் தொடங்குவோம் பயணத்தை.

இதோ, கீழே இருக்கும் படத்தில் இடது புறம் கடலோரம் இருப்பது தான் துபை. (அப்பாடா ஒரு வழியா பைசா செலவில்லாம துபையை பார்த்த திருப்து கிடைச்சிருக்குமே?). Palm Island & The World எல்லாம் தெரியுதா? வலது புறம் வட்டமிட்டு காட்டப்பட்டிருக்கும் இடம்தான் நாங்கள் சென்ற பாலைவனம். இது துபை-ஹத்தா சாலையில் அமைந்துள்ளது. துபையில் இங்கு செல்ல அதிகபட்சம் அரை மணி நேரம் பிடிக்கும்.




மேலே வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள பாலைவனத்தின் க்ளோஸ்-அப் மீண்டும் கூகிள் உதவியுடன் கீழே. எப்படி இருக்கிறது பாருங்கள். மண் கடல்.
இதற்குள்தான் பயணம். ஒரு த்ரில்லிங் அனுபவம் தான். அதிலும் எங்களுக்கு கிடைத்த ஓட்டுனர் போல திறமை வாய்ந்தவர் அமைந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.




வீட்டு வாசலுக்கே வந்து கூட்டிச்சென்றார்கள். வீட்டிலிருந்து கிளம்பும் போதே அந்த ஓட்டுனர் வயிற்றில் புளியை கரைத்தார். இருந்தாலும், 'இது பனங்காட்டு நரி, இந்த சலசலப்பிற்கெல்லாம் அஞ்சாது' என்பதை போல முகத்தை வைத்துக்கொண்டேன். அரை மணி நேரப் பயணத்திற்குப் பின் கீழுள்ள இடத்தை அடைந்தோம். அங்கு சிறிது இளைப்பாறிக்கொள்ள சொன்னார்கள். அப்புறம் தான் தெரிந்தது நாங்கள் மட்டுமல்ல (நாங்கள் சென்ற வண்டி மட்டுமல்ல) அதே சுற்றுலா நிறுவனத்தை சார்ந்த மேலும் 4 வண்டிகள் நின்றுகொண்டிருந்தன. எல்லா வண்டிகளுக்கும் டயரிலிருந்து காற்றளவை குறைத்தார்கள். அப்போதுதான் பாலவனத்தில் வண்டி எளிதாக செல்லுமாம். பின்னர் அங்கிருந்து ஸஃபாரி தொடங்கியது. அப்போதே எனக்கு என் கையிலிருந்த எனது ஒன்றரை வயது குழந்தையை பற்றி கவலை வந்துவிட்டது. பயந்துவிடுவாளோ என்று. ஆனால் உண்மையில் பயந்தது அவளை தவிர மற்ற யாவரும் தான். She enjoyed a lot. அதிலும் வந்ததிலேயே எங்கள் வண்டி ஓட்டுனர் தான் கேப்டன். அவரை பின்பற்றித்தான் மற்ற 4 வண்டிகளும் வந்து கொண்டிருந்தன.




பயணத்தின் போது பாலைவனத்தின் அழகை ரசித்ததுடன், அதை படமாக்கவும் நான் தவறவில்லை. ஒரு கையில் குழந்தை மறு கையில் கேமரா. அதில் எடுத்த சில படங்களை கீழே காணலாம். கூட வந்த நண்பரின் மனைவி நண்பரை முறைத்து கொண்டே வந்தார். பின்புதான் தெரிந்தது அவர் கொண்டு வந்த கேமராவில் சார்ஜ் இல்லையென்று.


பாலைவனத்தில் நடுவில் எங்களுடன் தொலையும் மற்ற வண்டிகள்.

பாலைவன முகட்டில் அணிவகுக்கும் ஊர்திகளின் கண்கொள்ளா காட்சி.
முகத்தில் மண் வாரி அடிக்கும் (நல்ல வேளை கண்ணாடின்னு ஒன்னை கண்டுபிடிச்சாய்ங்க) Dune Bashing காட்சி இதுதான். என்னதான் கண்ணாடி இருந்தாலும் வண்டிக்கு உள்ளும் தூசி சிறிதாக வரத்தான் செய்தது.

சூரியன் மறையும் தருனத்தில் பாலைவனத்தின் அழகு.
துபை நகரத்தில் பேசி கும்மியடிக்க இடம் இல்லாதது போல் நடு பாலையில் அரபிகளின் மீட்டிங்.

யோவ் படம் காட்டுனது போதும்யா என்று சைகையுடன் எனது மகள்.


குதூகலத்தில் சுற்றி வரும் கார்களும், பைக்குகளும்.

ஒரு வீடியோ காட்சி.




ஒரு இடத்தில் கூட வந்த மற்றொரு வண்டி மண்ணில் புதைந்து மாட்டிக்கொள்ள, இழுத்து உதவி செய்யும் எமது வண்டி.
இவர்தான் அந்த எமகாதக ஓட்டுனர். ஓவ்வொரு இடத்திலும் தன்னால் முடிந்த அளவு எங்களுக்கு வயிற்றில் புளி கரைத்த புண்ணியவான் இவர்தான். ரியல் சூப்பர்மேன். எங்களது வண்டியின் சாகசங்களை பார்த்து கூட வந்த மற்ற வண்டியின் பயணிகள் பொறாமைப்பட வைத்தவர். ஹீரோ.

இவையெல்லாம் முடிந்து இருட்டியவுடன் முகாமிற்கு கொண்டு சென்றார்கள். அங்கு பெல்லி ஆட்டம் மற்றும் இரவு சாப்பாடு. அன்று விடிந்தால் 2007 பிறக்கிறது என்பதால் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருந்தார்கள். குளிர் அதிகமாக (கொடுமையான குளிர்) இருந்ததால் எப்படா சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு போய் தூங்கலாம் என்றிருந்தது. புகை படம் எடுக்கும் நிலமை கூட இல்லை அந்த குளிரில். சாப்பாட்டிற்கு அழைத்தார்கள். சுட்ட கறி வகைகள் சுவையாகத்தான் இருந்தது. சாப்பிட்டுவிட்டு வீடு கிளம்பினோம். வீட்டில் எங்களை இறக்கிவிட்டு கிளம்ப இருந்த ஓட்டுனரிடம் 'நீதான் உண்மையான சூப்பர்மேன்' என்றவுடன் வெட்கம் கலந்த சிரிப்புடன் அதே வேகத்தில் சென்றார் அந்த பலுச்சிஸ்தான்காரர்.

Tuesday, February 20, 2007

பலூன் திருவிழாவும் எனக்கு கிடைத்த ஆப்பும்

சிறிது நாட்களுக்கு முன் முடிவடைந்த 'துபை ஷாப்பிங் திருவிழா'வில் பலூன் திருவிழாவும் (balloon festival) நடைபெற்றது. ஒரு மாத காலம் 'வெப்பக் காற்று' (hot air) பலூன் துபை வானில் பறக்கவிட்டு வேடிக்கை காட்டினார்கள். துபை வரலாற்றில் முதன்முறையாக என்று சன் டிவி ஸ்டைலில் விளம்பரம் வேறு. பெரும்பாலும் துபை புறநகர் பகுதியிலேயே இது நடந்தது.

இம்முறை இதை சோதனை ஓட்டமாகவே நடத்த இருப்பதாகவும், ஸ்பான்ஸர்கள் / வி.ஐ.பி-க்கள் தவிர பொதுமக்கள் (காசு கொடுத்தாலும் கூட) பறக்க முடியாது எனவும் கூறினர். சரி, நமக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி எப்படியாவது இதில் பறந்தவிட வேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டேன். அது போலவே வாய்ப்பும் கிட்டியது. அன்றைய தினம் ஜுமைரா Burj-Al-Arab-ல் இருந்து தொடங்கி Global Village வரை பறக்க திட்டமிட்டிருப்பதாக கூறினர். மனைவி குழந்தையுடன் ஜுமைரா Burj-Al-Arab போய் சேர்ந்தேன்.

பலூன் ஒவ்வொன்றாக காற்று நிரப்பி ஆயத்தப்படுத்தினார்கள். அப்போது ஒருங்கினைப்பாளர் ஒருவர் என்னிடம் வந்து யார் யார் பறக்க போகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு நான் , மனைவி மற்றும் குழந்தை என்றேன். இல்லை சார், குழந்தைகள் பறக்க அனுமதியில்லை என்று ஒரு குண்டை தூக்கி போட்டார். வேறென்ன, வழக்கமான தியாக மனதோடு நான் குழந்தையை பார்த்துக்கொள்வதாகவும் மனைவி மட்டும் பறக்கட்டும் என கூறினேன் (மனதிற்குள் எனதருமை குழந்தையால் எனக்கு கிட்டிய ஆப்பை நினைத்து வருந்தியபடி). நமக்கு ஆப்பு எந்தெந்த ரூபத்திலெல்லாம் வருது பாருங்க. ஆசிப் அண்ணாச்சி ஸ்டைலில் 'நல்லா இரு' என வழியனுப்பி வைத்தேன். என் மனைவி மட்டும் மகிழ்ச்சியாக பறந்தார்.

வந்துட்டு சும்மா போனா நல்லா இருக்காதே என, கையோடு கொண்டு போயிருந்த காமராவில் கொஞ்சம் க்ளிக்கித் தள்ளினேன். இதோ உங்கள் பார்வைக்காக சில..


ஜுமைரா Burj-Al-Arab


பலூன்களில் வெப்பக் காற்று நிரப்பப்படுகிறது


மனைவி பறந்த பலூன் ஆயத்தமாகிறது


மனைவி பறக்கிறார்






அன்று பிடித்தவைகளில் எனக்கு பிடித்தது

Sunday, November 05, 2006

லொடுக்கான கதை

நமக்கு கிரிக்கெட்னா உசுருங்க. இருக்காதா பின்ன இந்தியனாச்சே. நான் கிரிக்கெட் பாக்க தொடங்கியது 1987 உலக கோப்பையிலிருந்து தான். அப்போ நம்ம பழய தல அசார்தான் ஹீரோ. அதுனால அவரே எனக்கும் ரோல் மாடல் (சூதாட்டம் அவர் செய்திருந்தது உண்மையெனில் அது தவிர்த்து). அப்போ புடிச்ச கிரிக்கெட் சனியன் என்னை இன்னும் உட்ட மாதிரி இல்லங்க. இந்த கிரிக்கெட்னால நான் என்னோட வீட்டுல வாங்கின அடி உதை திட்டுக்கு கொறவில்லங்க. இப்போ வரைக்கும் பொண்டாட்டிகிட்ட திட்டு தான். என்ன செய்ய சனியனை உட்டுத் தொலைக்க முடியல.


சரி மேட்டருக்கு வருவோம். பதிவெழுதவதற்காக ஒரு வித்தியாசமான பேரு போட யோசிச்சப்ப 'நந்தா' படத்துல கருணாஸ் கேரக்டர் பேரு ஞாபகம் வந்துச்சு. அதுல அவரு கொஞ்சம் தெந்தி தெந்தி நடப்பாருங்க. அதுனால அவருக்கு அதுல 'லொடுக்கு' பாண்டினு பேரு. பேரு வித்தியாசமா இருந்துச்சு. சரி அதையே வச்சுக்கலாம்னு வச்சுட்டேன். இப்போ பாத்தீங்கன்னா என்னோட நிலமையும் அவரை மாதிரியே தெந்தி தெந்தி நடக்க வேண்டியதா போச்சு. எல்லாம் இந்த சனியன் கிரிக்கெட்னால வந்த வெனை. வயாசிகிடுச்சுனு உடம்பு சொன்ன போதுமா மனசு இன்னும் எளமையாத் தானே இருக்குனு நானும் கிரிக்கெட் ஆட கெளம்பிட்டேன். எங்க நிறுவனத்துல கிரிக்கெட் டீம் ஒன்னு இருக்குங்க. அதுல நானும் உண்டுங்க. துபையில நடக்குற டிவிஷன் லெவெல் (A , B , C னு பல லெவல் இருக்கு) பங்கெடுக்குறது வழக்கம். கோடை காலம் முடிஞ்சு இப்போ சீஸன் தொடங்கியாச்சு. எங்க நிறுவனத்துக்குள்ள பல டீம்கள் உருவாக்கி Inter Company Tournament நடக்கும். இந்த முறையும் இன்னும் சில நாட்களில் நடக்க இருக்கிறது. அதுக்காக நம்ம பசங்களோட போன வியாழக்கிழமை ப்ராக்டீஸ் பண்ணப் போனப்ப தான் இந்த வினை நடந்துச்சு. ப்ராக்டீஸ் முடியப்போகும் நேரத்துல காலில் இருந்து 'கடக்'னு ஒரு சத்தம். உடனே உயிர் போகும் வலி. காலை நகத்த முடியல. அப்போதான் பழய காயம் ஞாபகம் வந்துச்சு. ஆமாங்க, 5 ஆண்டுக்கு முன்னாடி கிரிக்கெட் ஆடும்போது, முழங்காலில் (மூட்டு சந்திப்பில்) உள்ள லெக்மா ஸ்ட்ரெச் ஆகிவிட்டது. அது சரியாக பல மாதங்கள் ஆனது. அதுக்கிடையில் knee-band இல்லாமல் விளையாடும் போதெல்லாம் வலி எடுக்கும். இப்போதும் மறந்து போய் knee-band அணியாமல் விளையாடச்சென்று விட்டேன். அதான் இப்படி ஆகிவிட்டது. சிறிது சிறிதாக வலி குறைந்து வருகிறது. சீக்கிரம் குணமாக இறைவனை வேண்டுவோம். இன்னும் 10 நாட்களில் குணமாகவில்லையெனில் எங்கள் அணி ஒரு ஸ்டார் ப்ளேயரை இழக்க வேண்டியிருக்கும். :)


பதிவெழுத தேர்ந்தெடுத்த பெயருக்கான பெயர்காரணம் இப்போது தான் அமைந்தது. அதான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த பதிவு.