Thursday, June 28, 2007

இதுல இம்புட்டு மேட்டர் இருக்கா?

நல்ல வேளை இந்த பழக்கம் இதுவரை எனக்கு இல்லைங்க. கல்லூரிக்காலத்தில் கூட சுத்தி இருந்தவங்க எத்தைனையோ பேரை வலைச்சு போட்ட இந்த புகை பழக்கத்திற்கு என்னமோ தெரியல என்னை புடிக்காம போயிருச்சு. தப்பிச்சேன்.

நேத்து நண்பன் ஒருத்தன் ஒரு மெயிலை அனுப்பி வைச்சான். 'சிகெரெட்டிற்குள் என்னென்னவெல்லாம் இருக்கு பாரு'ன்னு. பார்த்த எனக்கு அதிர்ச்சி தாங்க. உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் எனக்கு இதுக்குள்ள இத்தனை சனியனுங்க ஒளிஞ்சிருக்குன்னு சத்தியமா தெரியாதுங்க. நான் நினைச்சதெல்லாம் சிகெரெட்டிற்குள்ள நிகோடின் மட்டுந்தான் இருக்கும்னு.



எல்லாரும் அறிவுரை சொல்லுவாங்க புகை பிடித்தால் ஆயுள் குறையும் என்று. என்னங்க ஒரு ரெண்டு மூனு வருடம் குறையுமா? அதெல்லாம் பெருசே இல்லைங்க. ஆனால், இருக்குறவரைக்கும் இதுனால வரும் கடுமையான நோயில்லாமல் (அடுத்தவங்களை தொல்லை பண்ணாம) போகலாம்ல. என்ன சொல்றீங்க? இனிமேலும் இந்த சிகெரெட்டிற்கு என்னை பிடிக்காமல் இருக்க வேண்டும். நீங்க எப்படியோ, அது உங்க விருப்பம் :).

Wednesday, June 27, 2007

Desert Safari - நாங்களும் படம் காட்டுவோம்ல

கடந்த டிசம்பர் 31-ந்தேதி கடும் குளிர் நேரத்தில் நான் குடும்பத்துடன் டெஸர்ட் ஸஃபாரி சென்றது ஜெஸிலாவின் நேற்றைய பதிவை பார்த்தவுடன் ஞாபகம் வந்தது. எனது 9 ஆண்டு துபை வாழ்க்கையில் அதுதான் நான் சென்றிருந்த முதல் பாலைவனப் பயணம். மீண்டும் மீண்டும் செல்லத்தூண்டும்படி அமைந்தது. அதற்குப் பின் இதுவரை வாய்ப்பு அமையவில்லை. வாய்ப்புகளை உருவாக்கவேண்டும் இனி. அப்படியொரு புது விதமான அனுபவம் அது. அதை உங்களுடன் சொற்களால் பகிர்ந்துகொள்வதை விட எனது கேமராவில் பதிந்து வைத்ததை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. ஜெஸிலாவின் நேற்றைய பதிவிலேயே அதைப் பற்றி நிறைய தகவல்கள் அறிய கிடைப்பதால் நான் படம் காட்டுவதோடு நிறுத்திக்கொள்கிறேன். (படம் காட்டுறதுலதான் நாம கில்லாடியாச்சே). புகைப்படம் எடுப்பதிலும் கொஞ்சம் ஆர்வம் அதிகம். அதுவும் ஒரு காரணம்.

அமீரகத்தில் இல்லாதவர்களுக்கு கொஞ்சம் எளிதில் புரிந்து கொள்வதற்காக 'கூகிள் புவி'யின் படத்துடன் தொடங்குவோம் பயணத்தை.

இதோ, கீழே இருக்கும் படத்தில் இடது புறம் கடலோரம் இருப்பது தான் துபை. (அப்பாடா ஒரு வழியா பைசா செலவில்லாம துபையை பார்த்த திருப்து கிடைச்சிருக்குமே?). Palm Island & The World எல்லாம் தெரியுதா? வலது புறம் வட்டமிட்டு காட்டப்பட்டிருக்கும் இடம்தான் நாங்கள் சென்ற பாலைவனம். இது துபை-ஹத்தா சாலையில் அமைந்துள்ளது. துபையில் இங்கு செல்ல அதிகபட்சம் அரை மணி நேரம் பிடிக்கும்.




மேலே வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள பாலைவனத்தின் க்ளோஸ்-அப் மீண்டும் கூகிள் உதவியுடன் கீழே. எப்படி இருக்கிறது பாருங்கள். மண் கடல்.
இதற்குள்தான் பயணம். ஒரு த்ரில்லிங் அனுபவம் தான். அதிலும் எங்களுக்கு கிடைத்த ஓட்டுனர் போல திறமை வாய்ந்தவர் அமைந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.




வீட்டு வாசலுக்கே வந்து கூட்டிச்சென்றார்கள். வீட்டிலிருந்து கிளம்பும் போதே அந்த ஓட்டுனர் வயிற்றில் புளியை கரைத்தார். இருந்தாலும், 'இது பனங்காட்டு நரி, இந்த சலசலப்பிற்கெல்லாம் அஞ்சாது' என்பதை போல முகத்தை வைத்துக்கொண்டேன். அரை மணி நேரப் பயணத்திற்குப் பின் கீழுள்ள இடத்தை அடைந்தோம். அங்கு சிறிது இளைப்பாறிக்கொள்ள சொன்னார்கள். அப்புறம் தான் தெரிந்தது நாங்கள் மட்டுமல்ல (நாங்கள் சென்ற வண்டி மட்டுமல்ல) அதே சுற்றுலா நிறுவனத்தை சார்ந்த மேலும் 4 வண்டிகள் நின்றுகொண்டிருந்தன. எல்லா வண்டிகளுக்கும் டயரிலிருந்து காற்றளவை குறைத்தார்கள். அப்போதுதான் பாலவனத்தில் வண்டி எளிதாக செல்லுமாம். பின்னர் அங்கிருந்து ஸஃபாரி தொடங்கியது. அப்போதே எனக்கு என் கையிலிருந்த எனது ஒன்றரை வயது குழந்தையை பற்றி கவலை வந்துவிட்டது. பயந்துவிடுவாளோ என்று. ஆனால் உண்மையில் பயந்தது அவளை தவிர மற்ற யாவரும் தான். She enjoyed a lot. அதிலும் வந்ததிலேயே எங்கள் வண்டி ஓட்டுனர் தான் கேப்டன். அவரை பின்பற்றித்தான் மற்ற 4 வண்டிகளும் வந்து கொண்டிருந்தன.




பயணத்தின் போது பாலைவனத்தின் அழகை ரசித்ததுடன், அதை படமாக்கவும் நான் தவறவில்லை. ஒரு கையில் குழந்தை மறு கையில் கேமரா. அதில் எடுத்த சில படங்களை கீழே காணலாம். கூட வந்த நண்பரின் மனைவி நண்பரை முறைத்து கொண்டே வந்தார். பின்புதான் தெரிந்தது அவர் கொண்டு வந்த கேமராவில் சார்ஜ் இல்லையென்று.


பாலைவனத்தில் நடுவில் எங்களுடன் தொலையும் மற்ற வண்டிகள்.

பாலைவன முகட்டில் அணிவகுக்கும் ஊர்திகளின் கண்கொள்ளா காட்சி.
முகத்தில் மண் வாரி அடிக்கும் (நல்ல வேளை கண்ணாடின்னு ஒன்னை கண்டுபிடிச்சாய்ங்க) Dune Bashing காட்சி இதுதான். என்னதான் கண்ணாடி இருந்தாலும் வண்டிக்கு உள்ளும் தூசி சிறிதாக வரத்தான் செய்தது.

சூரியன் மறையும் தருனத்தில் பாலைவனத்தின் அழகு.
துபை நகரத்தில் பேசி கும்மியடிக்க இடம் இல்லாதது போல் நடு பாலையில் அரபிகளின் மீட்டிங்.

யோவ் படம் காட்டுனது போதும்யா என்று சைகையுடன் எனது மகள்.


குதூகலத்தில் சுற்றி வரும் கார்களும், பைக்குகளும்.

ஒரு வீடியோ காட்சி.




ஒரு இடத்தில் கூட வந்த மற்றொரு வண்டி மண்ணில் புதைந்து மாட்டிக்கொள்ள, இழுத்து உதவி செய்யும் எமது வண்டி.
இவர்தான் அந்த எமகாதக ஓட்டுனர். ஓவ்வொரு இடத்திலும் தன்னால் முடிந்த அளவு எங்களுக்கு வயிற்றில் புளி கரைத்த புண்ணியவான் இவர்தான். ரியல் சூப்பர்மேன். எங்களது வண்டியின் சாகசங்களை பார்த்து கூட வந்த மற்ற வண்டியின் பயணிகள் பொறாமைப்பட வைத்தவர். ஹீரோ.

இவையெல்லாம் முடிந்து இருட்டியவுடன் முகாமிற்கு கொண்டு சென்றார்கள். அங்கு பெல்லி ஆட்டம் மற்றும் இரவு சாப்பாடு. அன்று விடிந்தால் 2007 பிறக்கிறது என்பதால் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருந்தார்கள். குளிர் அதிகமாக (கொடுமையான குளிர்) இருந்ததால் எப்படா சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு போய் தூங்கலாம் என்றிருந்தது. புகை படம் எடுக்கும் நிலமை கூட இல்லை அந்த குளிரில். சாப்பாட்டிற்கு அழைத்தார்கள். சுட்ட கறி வகைகள் சுவையாகத்தான் இருந்தது. சாப்பிட்டுவிட்டு வீடு கிளம்பினோம். வீட்டில் எங்களை இறக்கிவிட்டு கிளம்ப இருந்த ஓட்டுனரிடம் 'நீதான் உண்மையான சூப்பர்மேன்' என்றவுடன் வெட்கம் கலந்த சிரிப்புடன் அதே வேகத்தில் சென்றார் அந்த பலுச்சிஸ்தான்காரர்.

Sunday, June 24, 2007

சுனிதா விண்வெளியில் பிரியாணி சாப்பிட்டாரா?

ஒரு வழியா அட்லாண்டிஸ் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிவிட்டது.விண்வெளிக்கு சென்றிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் ஆறு பேரும் வெற்றிகரமாக பூமி திரும்பிட்டாங்க. பூமிக்கு வெளியே 250 மைல்கள் தொலைவில் 188 நாட்களாக மிதந்து கொண்டிருந்தவர்கள் தாய்கோள் திரும்பிட்டாங்க. இந்தியா முழுதும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது சுனிதா வெற்றிகரமாக திரும்ப. அனனத்து மத பிரார்த்தனைகளும் இந்தியாவெங்கும் நடைபெற்றது. எங்கு பார்த்தாலும் சுனிதா சுனிதா சுனிதாதான். காரணம் அவர் இந்தியராம் (வம்சா வழியாம். அவரிடம் கேட்டால்தான் தெரியும் அவர் இந்தியரா அமெரிக்கரா என்று). இந்திய மக்கள் அவருடைய வருகைக்காக இறைவனை வேண்டியது குற்றமில்லைதான், ஆனால் அவருடன் சேர்ந்து வந்த மற்ற ஆறு பேரை பற்றி யாரும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. அவருடன் பயணித்தவர்கள் மனிதர்கள் இல்லையா? இல்லை இந்தியாவில் மற்ற நாட்டு மனித உயிர்களுக்கு மதிப்பில்லையா? (அவருடைய விண்வெளிச் சீருடையில் கம்பீரமாக அமெரிக்க கொடியை பொறித்திருக்கிறார் பாருங்கள்)




அவருடன் விண்வெளிக்குச் சென்றவர்கள்:


அதைப் பற்றி ரொம்ப பேசக்கூடாது. அப்புறம் குதர்க்கவாதியாகி முத்திரை முதுகில் குத்திடுவாங்க.

நம்ம மேட்டருக்கு வருவோம். சரி, விண்வெளிக்கு போறாங்களே அங்கே என்னதான் சாப்பிடுவாங்க? எப்படி சமைப்பாங்க? யாரு சமைப்பா? எங்கே சமைப்பாங்க? என்ற உயிரினங்களுக்கு இன்றியமையாத மேட்டரை பத்தி சந்தேகம் வந்துடுச்சு. நம்ம புத்தி எங்கே போகுது பாத்தீங்களா? நமக்கு ஈடுபாடு உள்ளதுலதானே நமக்கு கேள்விகள் எழும். அங்குள்ள எடை வேறுபாடு, ஈர்ப்பு விசை, அழுத்தங்கள் இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு திரவ உணவாகத்தான் இருக்கும் என நான் நினைத்திருந்தேன். நமக்கிருக்கிற மூளைக்கேத்தவாறுதானே நாம சிந்திக்க முடியும். சரி சந்தேகம் வந்தது வந்துருச்சு உடனே தீர்த்திடுவோம். சந்தேகம் பொல்லாத நோய் என்று சொல்றாங்களே பெரியவங்க. 'இணையம் இருக்க பயமேன்' என்று உடனே இணையத்தில் தேடும் வேலையில் ஈடுபட்டேன். முதலில் விண்களங்களின் படங்களை தேடியபோது சுனிதாவிற்கான விண்வெளி சாப்பாடு மெனு கிட்டியது (அவிய்ங்களும் நம்ம டேஸ்டை தெரிஞ்சு வச்சிருக்காய்ங்கப்பா. தேடலின் முதல் படமே சாப்பாட்டு மெனு). பார்த்தவுடன் அசந்தே விட்டேன். நீங்களும் பாருங்கள்.




அடடா! அடிபொலி சாப்பாடுங்க. சிக்கன், மாட்டுக்கறி, சூப், பழச்சாறுகள் இன்ன பிற. வெலுத்து கட்டியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். எங்கே போனாலும் நம்ம மனிதர்கள் சாப்பாட்டில் குறைவைப்பதில்லை போலும். விண்வெளியிலும் இங்கு என்ன சாப்பிடுகிறோமோ அதே உணவு வகைகளைத்தான் சமைத்து சாப்பிடுவார்களாம். இருந்தாலும், தான் ஐஸ்கிரீமை ரொம்ப மிஸ் பண்ணியதாக சுனிதா தெரிவித்ததாக ஒரு பண்பலை வானொலி காலையில் கூறியது. மெனுவைப் பார்த்தா ஐஸ்கிரிம் கிடைக்காட்டி என்ன அதான் நல்ல சாப்பாடு கிடைச்சிருக்கே என தோன்றியது. ஒவ்வொரு விண்வெளி வீரர்களும் தங்களுக்கு பிடித்த உணவை பயணம் முழுதும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாமாம். ஆனால், உணவுக் கட்டுப்பாட்டு மருத்துவரின் ஆலோசனையுடன்.

விண்களத்தில், (அதாவது விண்வெளிக்கு சென்றடைந்து ராக்கெட்டிலிருந்து விடுபட்டு வெளியில் மிதக்கும் போது தான் சமைக்க முடியும் என தெரிகிறது)சமைப்பதற்கென்று விண்களத்தின் நடுப்பகுதியில் ஒரு இடம் உள்ளதாம். அது Galley என்றழைக்கப்படுகிறது. அதில் hot and cold water dispensers, pantry, oven, food serving trays, personal hygiene station மற்றும் water heater ஆகியவை இருக்குமாம். விண்வெளி வீரர்களில் யாராவது ஒருவர் சமைப்பாராம். ஒரு மணி நேரத்தில் நான்கு பேருக்கான உணவு சமைத்துவிடலாமாம். அமெரிக்க உணவு வகைகள் சமைக்க அவ்வளவு நேரம்தான் ஆகும். நம்ம நாட்டு சாப்பாடுக்கு? அங்கே நம்ம நாட்டுக்காரங்க யாராவது போகும் போது பார்த்துக்கொள்ளலாம். என்ன சொல்றீங்க? கொஞ்ச நாள் வெளிநாட்டுல தங்கியிருந்தாலே அங்குள்ள 'வேக(வேகா?) உணவு'க்கு அடிமையாகிவிடும் நாம் விண்வெளிக்கு போனால் மட்டும் நம்ம நாட்டு உணவா உண்ணப்போகிறோம்?

ஆக மொத்தம் பொறி தட்டிய சிறிய சந்தேகத்தால் ஓரளவு(சிறிதளவாவது) விண்வெளி உணவு முறை பற்றி அறிந்து கொண்டேன். உங்களுடன் பகிர நினைத்தேன். விரிவாக எழுத வேண்டுமெனில் முழுதுமாக மொழியாக்கம் செய்ய வேண்டி வரும். நமக்கு அத்தனை திறமையில்லைன்னு உங்களுக்கும் தெரியும். ஆகவே மேலும் விபரங்கள் correct technical termsஸுடன் அறிய கீழே க்ளிக்குங்கள்.

ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக அறிந்துகொள்ள.

நீளமான விரிவான கட்டுரை.

அதெல்லாம் சரி, சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் பிரியாணி சாப்பிட்டாரான்னு கேக்குறீங்களா? மேலுள்ள மெனுவை பாத்தா அப்படி தெரியலைங்கோ. விடு ஜூட்!!