Desert Safari - நாங்களும் படம் காட்டுவோம்ல
கடந்த டிசம்பர் 31-ந்தேதி கடும் குளிர் நேரத்தில் நான் குடும்பத்துடன் டெஸர்ட் ஸஃபாரி சென்றது ஜெஸிலாவின் நேற்றைய பதிவை பார்த்தவுடன் ஞாபகம் வந்தது. எனது 9 ஆண்டு துபை வாழ்க்கையில் அதுதான் நான் சென்றிருந்த முதல் பாலைவனப் பயணம். மீண்டும் மீண்டும் செல்லத்தூண்டும்படி அமைந்தது. அதற்குப் பின் இதுவரை வாய்ப்பு அமையவில்லை. வாய்ப்புகளை உருவாக்கவேண்டும் இனி. அப்படியொரு புது விதமான அனுபவம் அது. அதை உங்களுடன் சொற்களால் பகிர்ந்துகொள்வதை விட எனது கேமராவில் பதிந்து வைத்ததை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. ஜெஸிலாவின் நேற்றைய பதிவிலேயே அதைப் பற்றி நிறைய தகவல்கள் அறிய கிடைப்பதால் நான் படம் காட்டுவதோடு நிறுத்திக்கொள்கிறேன். (படம் காட்டுறதுலதான் நாம கில்லாடியாச்சே). புகைப்படம் எடுப்பதிலும் கொஞ்சம் ஆர்வம் அதிகம். அதுவும் ஒரு காரணம்.
அமீரகத்தில் இல்லாதவர்களுக்கு கொஞ்சம் எளிதில் புரிந்து கொள்வதற்காக 'கூகிள் புவி'யின் படத்துடன் தொடங்குவோம் பயணத்தை.
இதோ, கீழே இருக்கும் படத்தில் இடது புறம் கடலோரம் இருப்பது தான் துபை. (அப்பாடா ஒரு வழியா பைசா செலவில்லாம துபையை பார்த்த திருப்து கிடைச்சிருக்குமே?). Palm Island & The World எல்லாம் தெரியுதா? வலது புறம் வட்டமிட்டு காட்டப்பட்டிருக்கும் இடம்தான் நாங்கள் சென்ற பாலைவனம். இது துபை-ஹத்தா சாலையில் அமைந்துள்ளது. துபையில் இங்கு செல்ல அதிகபட்சம் அரை மணி நேரம் பிடிக்கும்.
மேலே வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள பாலைவனத்தின் க்ளோஸ்-அப் மீண்டும் கூகிள் உதவியுடன் கீழே. எப்படி இருக்கிறது பாருங்கள். மண் கடல்.
இதற்குள்தான் பயணம். ஒரு த்ரில்லிங் அனுபவம் தான். அதிலும் எங்களுக்கு கிடைத்த ஓட்டுனர் போல திறமை வாய்ந்தவர் அமைந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.
வீட்டு வாசலுக்கே வந்து கூட்டிச்சென்றார்கள். வீட்டிலிருந்து கிளம்பும் போதே அந்த ஓட்டுனர் வயிற்றில் புளியை கரைத்தார். இருந்தாலும், 'இது பனங்காட்டு நரி, இந்த சலசலப்பிற்கெல்லாம் அஞ்சாது' என்பதை போல முகத்தை வைத்துக்கொண்டேன். அரை மணி நேரப் பயணத்திற்குப் பின் கீழுள்ள இடத்தை அடைந்தோம். அங்கு சிறிது இளைப்பாறிக்கொள்ள சொன்னார்கள். அப்புறம் தான் தெரிந்தது நாங்கள் மட்டுமல்ல (நாங்கள் சென்ற வண்டி மட்டுமல்ல) அதே சுற்றுலா நிறுவனத்தை சார்ந்த மேலும் 4 வண்டிகள் நின்றுகொண்டிருந்தன. எல்லா வண்டிகளுக்கும் டயரிலிருந்து காற்றளவை குறைத்தார்கள். அப்போதுதான் பாலவனத்தில் வண்டி எளிதாக செல்லுமாம். பின்னர் அங்கிருந்து ஸஃபாரி தொடங்கியது. அப்போதே எனக்கு என் கையிலிருந்த எனது ஒன்றரை வயது குழந்தையை பற்றி கவலை வந்துவிட்டது. பயந்துவிடுவாளோ என்று. ஆனால் உண்மையில் பயந்தது அவளை தவிர மற்ற யாவரும் தான். She enjoyed a lot. அதிலும் வந்ததிலேயே எங்கள் வண்டி ஓட்டுனர் தான் கேப்டன். அவரை பின்பற்றித்தான் மற்ற 4 வண்டிகளும் வந்து கொண்டிருந்தன.
பயணத்தின் போது பாலைவனத்தின் அழகை ரசித்ததுடன், அதை படமாக்கவும் நான் தவறவில்லை. ஒரு கையில் குழந்தை மறு கையில் கேமரா. அதில் எடுத்த சில படங்களை கீழே காணலாம். கூட வந்த நண்பரின் மனைவி நண்பரை முறைத்து கொண்டே வந்தார். பின்புதான் தெரிந்தது அவர் கொண்டு வந்த கேமராவில் சார்ஜ் இல்லையென்று.
பாலைவனத்தில் நடுவில் எங்களுடன் தொலையும் மற்ற வண்டிகள்.
பாலைவன முகட்டில் அணிவகுக்கும் ஊர்திகளின் கண்கொள்ளா காட்சி.
முகத்தில் மண் வாரி அடிக்கும் (நல்ல வேளை கண்ணாடின்னு ஒன்னை கண்டுபிடிச்சாய்ங்க) Dune Bashing காட்சி இதுதான். என்னதான் கண்ணாடி இருந்தாலும் வண்டிக்கு உள்ளும் தூசி சிறிதாக வரத்தான் செய்தது.
சூரியன் மறையும் தருனத்தில் பாலைவனத்தின் அழகு. துபை நகரத்தில் பேசி கும்மியடிக்க இடம் இல்லாதது போல் நடு பாலையில் அரபிகளின் மீட்டிங்.
யோவ் படம் காட்டுனது போதும்யா என்று சைகையுடன் எனது மகள்.
குதூகலத்தில் சுற்றி வரும் கார்களும், பைக்குகளும்.
ஒரு வீடியோ காட்சி.
ஒரு இடத்தில் கூட வந்த மற்றொரு வண்டி மண்ணில் புதைந்து மாட்டிக்கொள்ள, இழுத்து உதவி செய்யும் எமது வண்டி. இவர்தான் அந்த எமகாதக ஓட்டுனர். ஓவ்வொரு இடத்திலும் தன்னால் முடிந்த அளவு எங்களுக்கு வயிற்றில் புளி கரைத்த புண்ணியவான் இவர்தான். ரியல் சூப்பர்மேன். எங்களது வண்டியின் சாகசங்களை பார்த்து கூட வந்த மற்ற வண்டியின் பயணிகள் பொறாமைப்பட வைத்தவர். ஹீரோ.
இவையெல்லாம் முடிந்து இருட்டியவுடன் முகாமிற்கு கொண்டு சென்றார்கள். அங்கு பெல்லி ஆட்டம் மற்றும் இரவு சாப்பாடு. அன்று விடிந்தால் 2007 பிறக்கிறது என்பதால் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருந்தார்கள். குளிர் அதிகமாக (கொடுமையான குளிர்) இருந்ததால் எப்படா சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு போய் தூங்கலாம் என்றிருந்தது. புகை படம் எடுக்கும் நிலமை கூட இல்லை அந்த குளிரில். சாப்பாட்டிற்கு அழைத்தார்கள். சுட்ட கறி வகைகள் சுவையாகத்தான் இருந்தது. சாப்பிட்டுவிட்டு வீடு கிளம்பினோம். வீட்டில் எங்களை இறக்கிவிட்டு கிளம்ப இருந்த ஓட்டுனரிடம் 'நீதான் உண்மையான சூப்பர்மேன்' என்றவுடன் வெட்கம் கலந்த சிரிப்புடன் அதே வேகத்தில் சென்றார் அந்த பலுச்சிஸ்தான்காரர்.
9 comments:
அடுத்த முறை வலைப்பதிவாளர்கள் சந்திப்பு நடு பாலைவனத்துல வச்சா என்ன?
யாரும் பாதில எஸ்கேப் ஆகமுடியாதுல்ல...
:))
படங்கள் எல்லாமே சூப்பரு.
வாங்க தம்பி,
பாலைவனம் எங்க இருக்குன்னு கேட்டீங்கள்ள அதான் மேப்போட படம் காட்டியிருக்கேன்.
ஆமா, அடுத்த முறை அங்கே கூடிடவேண்டியதுதான். ஆனால், அபிஅப்பா ஒத்துக்கமாட்டாரே. ஏன் தெரியுமா? அதான் தண்ணியில்லா காடாச்சே!! :)
தம்பியுடைய idea நல்லாத்தான் இருக்கு
//சுல்தான் said...
தம்பியுடைய idea நல்லாத்தான் இருக்கு
//
தம்பியுடையான் படைக்கு அஞ்சான்.
அட்டகாசம் லொடுக்கு ஆனா நீங்களும் நடன மங்கையின் புகைப்படத்த போடலையே :(
//அய்யனார் said...
அட்டகாசம் லொடுக்கு ஆனா நீங்களும் நடன மங்கையின் புகைப்படத்த போடலையே :(
//
அவுங்க இருட்டுல ஆடுனதுனால நான் அவங்கள படம் புடிக்கல.
உங்க ஃபீலிங்க்ஸ் எனக்கு புரியுது. பேசாம ஒரு எட்டு போயிட்டு வந்துடுங்க.
இருந்தாலும் இம்புட்டு புடிவாதம் ஆகாதப்பூ.
படங்கள் அருமை. எனக்கு map எதுவும் தெரியவில்லையே?
//அடுத்த முறை வலைப்பதிவாளர்கள் சந்திப்பு நடு பாலைவனத்துல வச்சா என்ன?// தம்பி, என் பதிவில் நான் உங்களிடம் கேட்டது அங்கிருந்து தப்பி வந்து, சொந்த கருத்து மாதிரி இங்கப் போட்டா என்ன அர்த்தம் ? ;-)
//அட்டகாசம் லொடுக்கு ஆனா நீங்களும் நடன மங்கையின் புகைப்படத்த போடலையே :(// அய்யனார், அவர் போட்டிருந்த அந்த ஒளிக்காட்சியில் ஒரு பெல்லி ஆட்டம் வீடியோவும் இருக்கு , கவனிக்கலையாக்கும்.
//படங்கள் அருமை. எனக்கு map எதுவும் தெரியவில்லையே?//
நன்றி. மேப் எல்லாம் அய்யனாரின் சாபத்தில் அழிந்துவிட்டது. இப்போது சரி செய்துள்ளேன்.
//அய்யனார், அவர் போட்டிருந்த அந்த ஒளிக்காட்சியில் ஒரு பெல்லி ஆட்டம் வீடியோவும் இருக்கு , கவனிக்கலையாக்கும்.
//
அது சத்தியமா நான் போட்ட வீடியோ இல்லைங்கோ. ரிலேட்டட் வீடியோஸ்னு சொல்லி வந்திருக்கும். எப்படியோ அய்யனார் ஆசை நிறைவேறுனா சரிதான்.
உண்மையா பாலைச்சவாரி போன மாதிரி இருக்கு.. பாசமலருக்கு நன்றி...இந்த சுட்டியை கொடுத்ததற்கு
Post a Comment