Sunday, October 29, 2006

ஜெயிச்சு தொலைங்கடா!

இன்று தெரியும் இந்தியாவின் வண்டவாளம். ஆமாம், நடந்து வரும் ஐசிசி சாம்பியன் கோப்பை போட்டியின் சுற்று போட்டிகளின் இறுதி போட்டி இன்று. கிட்டத்தட்ட காலிறுதி மாதிரித்தான். வெல்லும் அணி அரையிறுதிச் செல்லும். எனக்குத் தெரிந்து ஏழெட்டு ஆண்டுகளா அசராம கலக்கி வரும் ஆஸ்திரேலியா கூடத்தான் நமக்கு ஆட்டம் இன்னிக்கு. பாக்கலாம் நம்ம பசங்க என்ன பண்றாய்ங்கன்னு.


இந்த ஆண்டு தொடக்கத்தில் மேற்கிந்திய சுற்றுப் பயணத்தில் தோற்க தொடங்கிய நம்ம அணி இன்னும் அதை மறக்காம் செஞ்சுக்கிட்டு இருக்கு. அணியோட மனநிலை சுத்தமா தன்னம்பிக்கை வீழ்ந்து கிடக்கு. இதுக்கெடையில, பட்டகாலிலே படும்னு சொல்ற மாதிரி, மேலும் ரெண்டு மூனு இடி நம்ம அணிக்கு விழுந்துருக்குங்க. அகார்கர் காயத்தினால் வெளியேறிவிட்டடார். யுவராஜ்சிங்கும் அவரை தொடர்ந்து 'நீ மட்டும் சாட்டு போடுவியா' னு அகார்கர்கிட்ட சொல்லிகிட்டே அவரும் காலில் காயம்பட்டு வெளியே. முனாஃபிற்கும் காயம் என்று சொல்லப்படுகிறது. ஆடுகளங்கள் வேறே ரணகளமா இருக்கு. இவற்றை எல்லாம் மீறி நம் அணி வெல்லுமா?


அப்புறம் நம்ம அணியிலேயே உஷாரா ஆஸ்திரேலியாகாரய்ங்க ஒரு சதிகாரனை வச்சிருக்காய்ங்க. அதாங்க நம்ம கோச். நல்ல கோச் போங்க. எத்தனை பேரு வாயில இருந்துட்டான் இந்தாளு. இந்தாளு நாசமாக்குன வீரர்களின் பட்டியல்ல லேட்டஸ்ட் கைஃப். ஒழுங்க ஆடிட்டுருந்தவன் நம்பிக்கையை 'உள்ளே வெளியே' ஆடி நாசாமாக்கிட்டாரு. அனேகமா இன்னிக்கு கைஃபுக்கு சான்ஸ் கிடைக்கும். எல்லாம் ஒரு தற்காலிகம் தான். சாப்பலோட எக்ஸ்பெரிமென்ட் வேறே இன்னும் முடிஞ்ச மாதிரி தெரியல. அனேகமா இன்னிக்கு ஓபனிங் பவுலிங் நம்ம ட்ராவிட் செஞ்சாலும் ஆச்சர்யப்படுவதுக்கில்ல. என்னமாச்சும் பண்ணி ஜெயிச்சு தொலைங்கடா! உங்க பின்னாடி அலைஞ்சுக்கிட்டு, நாங்களும் ஒழுங்கா கஞ்சி தண்ணி இல்லாம, வேலை வெட்டி பாக்காம... என்னத்த சொல்றது போங்க....

Saturday, October 28, 2006

இந்தியாவில் ரன்னுக்கு பஞ்சமா?

காண்பதென்ன கனவா இல்லை நனவா? என்று எல்லோரும் தன்னைத் தானே ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியதாயிற்று இந்த முறை இந்தியாவில் நடக்கும் ICC Champion's Trophy முடிவுகளை பார்த்து. பிறகென்னங்க, இந்திய ஆடுகளங்கள் என்றாலே மட்டையாளர்கள் எல்லாம் வாயில் ரன் ஊறி விளாசித் தள்ளி ஓட்டக் குவியலை எடுத்துக் கொண்டிருந்த காலம் போய், இப்போ அணி 150 எடுப்பதற்கே போதும் போதும் என்றாகிவிடுகிறதே. முன்பெல்லாம் இந்தியாவில் 300 ஓட்டங்கள் எடுப்பது எளிதாயிருந்தது, அதிலும் கூத்து அதையும் எதிரணி சேஸ் செய்து விடுவது. இந்திய ஆடுகளங்கள் பந்து வீச்சாளர்களின் மயானம் என்றழைத்தார்கள்.


ஆனால், இப்போது நிலைமை தலைகீழ். பந்து வீச்சாளர்கள் காட்டில் அடை மழை பெய்து கொண்டிருக்கிறது. பந்து எகிரி குதித்து வருகிறது. மட்டையாளர்கள் காதோரம் ரீங்காரம் பாடிச் செல்கிறது பந்து. இது இந்தியாதானா என்று பந்து வீச்சாளர்களே வியக்கும் அளவிற்கு. என்னைப் பொருத்த வரை இதுவே சரியான ஆடுகளங்கள். ஆஸ்திரேலியாவின் பெர்த் அளவிற்கு இல்லையென்றாலும் பந்து வீச்சாளர்களை சாகடிக்காத ஆடுகளங்கள் இந்த முறை உருவாக்கப்பட்டுள்ளன. இதில் ICC- Pitch Specialist -ம் ஏதோ ஒன்றை ஆடுகளம் இறுதி வரை பிடிப்போடு இருக்க ஸ்ப்ரே செய்கிறாராம். இதையெல்லாம் சற்றும் எதிர் பார்த்திராத மட்டையாளர்கள் பெவிலியனுக்கும் பிட்சுக்கும் இடையே வை.கோ (அதாங்க நடை பயணம்) செய்து கொண்டிருக்கிறார்கள். கீழ்கண்ட ஸ்கோர் போர்டை பார்த்தால் நிலமை புரியும்:

Eng- 125/10 (37)
Ind - 126/6 (29.3)

NZ- 195/10 (45.4)
SA-108/10 (34.1)


SL - 253/10 (49.3)
PAK - 255/6 (48.1)

WI - 234/6 (50)
AUS - 224/9 (50)


NZ - 165/10 (49.2)
SL - 166/3 (36)

ENG-169/10 (45)
AUS-170/4 (36.5)

SA-219/9 (50)
SL-141/10 (39.1)

NZ-274/7 (50)
PAK-223/10 (46.3)

IND-223/9 (50)
WI-224/7 (49.4)

SA-213/8 (50)
PAK-89/10 (25)

இதில் நன்றாக பாதிக்கப்பட்டவர்கள் இந்தியா, பாக்கிஸ்தான், லங்கா அணியினர்தான். இவர்களுக்கு இந்திய ஆடுகளங்களே எமனாகி உள்ளது. என்ன செய்வது பாவம். தரமான ஆடுகளங்களில் பயிற்சி பெறாதவர்கள் தானே. ஏற்கனவே இதில் இரண்டு அணிகள் வெளியாகி விட்டது. இந்தியா மட்டும் மிச்சம். 29-ம் தேதி தெரியும் அதுவும். இத்தகைய ஆடுகளங்களில் நன்றாக பேட் செய்பவர்கள் செய்து தான் வருகிறார்கள். சரியான, முறையான ஆட்டத்தின் மூலம் (correct footwork, shot selection) இது போன்ற ஆடுகளத்திலும் ஓட்டங்கள் குவிக்கலாம் என்பது வேறு செய்தி. ஒரு தலை பட்ச ஆட்டங்களாக இல்லாமல் ஆட்டம் முடியும் வரை விருவிருப்பாகவே உள்ளது இம்முறை. இப்படித்தான் இருக்க வேண்டும். அதில்லாமல், சும்மா 300 எடுத்து, அதையும் எதிரணி சேஸ் செய்து வெற்றி பெற்று. சே! என்ன ஆட்டங்கள் அவை. அப்படி ஆடுகளங்களில் ஆடி தானே நாமெல்லாம் வெறும் மட்டையாளர்களை மட்டுமே தலையில் தூக்கி வைத்து ஆடுகிறோம். இந்தியாவில் எப்போதாவது பந்து வீச்சாளர்களை மதித்திருக்கிறோமா? எந்த பந்து வீச்சாளர்களாவது (கபில் - ஆல் ரவுண்டர்) இந்தியாவிற்கு தலமை தாங்கி இருக்கிறாரா? இது போன்ற ஆடுகளங்களை மேலும் உருவாக்கினால் அந்த குறை தீரும்.


இந்த முறை நடக்கும் போட்டிகளில் என்னை உறுத்திய மற்றொரு செய்தி என்னவென்றால், வெறும் நான்கு நகரங்களில் மட்டுமே இந்த அனைத்துப் போட்டிகளும் நடத்தப்படுகிறது. மும்பை (வான்கடேயில் இல்லை என்பது வேறு செய்தி), அஹமதாபாத், ஜெய்ப்பூர் மற்றும் மொஹாலி. இந்த நான்கு நகரங்களும் இந்திய வரை படத்தில் மேற்கு & வட மேற்கு திசையில் உள்ள மாதிரி தெரியவில்லை? ஆம், இங்கும் அரசியல் இருப்பதாகவே தெரிகிறது எனக்கு. இதெல்லாம் (குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் வாரியங்கள்) பவாரின் ஜல்லியடி கூட்டத்தினர்கள் என்றே கருதுகிறேன். இல்லையென்றால் பெங்களூர், சென்னை, கல்கத்தா போன்ற ஒப்பற்ற நகரங்கள் புறக்கனிக்கப் பட்டிருக்குமா? என்று ஓயும் இந்த விளங்காத அரசியல் இந்திய கிரிக்கெட்டில்!!


சரி, 29-ந் தேதி ஆட்டத்திற்கு வருவோம். இன்று இந்தியா, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான காலிறுதி போட்டி என்றே கூறலாம். இந்த மன்னாய்ப் போன சாப்பல் , இர்ஃபானை வைத்து சோதனை செய்வதை நிறுத்து விட்டு. சரியான அணியைத் தேர்ந்தெடுத்து (மோங்கியாவிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும்- ராய்னா அவுட்), சரியான பேட்டிங் ஆர்டர் அமைத்து, தன்னம்பிக்கை வீரர்களுக்கு அளித்து நம் அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஏன் இதையெல்லாம் நமது ட்ராவிடம் கூறாமல் சாப்பலிடம் கூறவேண்டும்? சாப்பல் சொல்வதை ஆமாம் சாமி, சரி சாமி போடுவது மட்டும் தானே ட்ராவிட் செய்து வருகிறார். முதுகெலும்பில்லாத அணித் தலைவர்.

Tuesday, October 17, 2006

மீண்டும் அசாருத்தீன்...

முகம்மது அசாருத்தீன். 6 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிரிக்கெட் உலகின் புகழின் உச்சியில் இருந்தவர். பல சாதனைகளுக்கு உரிமையாளர். அறிமுகமாகியதிலிருந்து (1984) முதல் மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து நூறுகளை அடித்தவர். ஜெயசூர்யா அதிரடியாக நூறு அடிக்கும் முன்பு வரை அதிவேக ஒருநாள் நூறுக்கு (62 பந்துகளில்) உரிமையாளர் (இன்று வரை அதுவே இந்தியாவின் அதிவேக நூறு). உலகின் தலைசிறந்த தடுப்பாட்டக்காரர் (ரோட்ஸுக்கு அடுத்து அவராகத்தான் இருப்பார்). இப்படி எத்தனையோ கூறிக்கொண்டே போகலாம்.


ஆனால், 2000-ம் ஆண்டு அவருக்கு வந்தது வினை. சூதாட்டத்தில் அவருக்குத்தான் பெரும் பங்குண்டு என்று குற்றாச்சாட்டிற்கு ஆளானார். அவருடன் சேர்ந்து ஜடேஜா, மோங்கியா, அஜய் ஷர்மா, பிரபாகர், சலிம் மாலிக், க்ரோனே ஆகியோரின் பெயர்களும் அடிபட்டது. அதில் க்ரோனே குற்றத்தை வெளிப்படையாக (சிறிது நாட்களுக்குப் பிறகுதான்) ஒப்புக் கொண்டார், அதோடில்லாமால் அவருக்கு சூதாட்டக்காரரை அசாருத்தீன் தான் அறிமுகப்படுத்தியதாக கூறினார். அதனால் அசாருக்கு வந்தது சோதனை. அவர் குற்றம் சுமத்தப்பட்டார். ICC-யும் அசார், க்ரோனே மற்றும் சலீம் மாலிக் ஆகியோர் மீது கிரிக்கெட் ஆட்டம் தொடர்பான (விளையாடுவது, வர்ணனை, பயிற்ச்சி கொடுப்பது போன்றவற்றிலிருந்து) செயல்களிலிருந்து முற்றிலும் ஆயுள் தடை விதித்தது. BCCI -யும் அதைத் தொடர்ந்து அதே போல் தடை விதித்தது. இதில் அசார் இதுவரை அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒப்புக்கொள்ள வில்லை. தடையை எதிர்த்து நீதி மன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இதுவரை விசாரனையில் அவருக்கெதிரான குற்றத்திற்கு ஆதாரம் கிடைக்கவில்ல. குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. இந்த நிலையில் அவர் BCCI,ICC யால் ஒதுக்கியே வைக்கப்பட்டிருந்தார்.


ஓரிரு நாட்களுக்கு முன் திடிரென அவரைப் பற்றிய புதிய சலசலப்பு கிரிக்கெட் உலகில் கிளம்பியுள்ளது. அதாவது, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலமைச் செயலகம் மும்பையில் சில நாட்களில் திறக்கப்பட உள்ளது. அந்நிகழ்ச்சியில் இந்தியாவின் அனைத்து அணித் தலைவர்களையும் அழைத்து சிறப்பிக்க முடிவு செய்துள்ளார்கள். அதில் அசாருத்தீனும் அடக்கம். அவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது டால்மியா போய் பாவார் வந்ததால் வந்த மாற்றம் என கிசு கிசுக்கப்படுகிறது. டால்மியாதான் அசாரின் துன்பங்களுக்கு காரணமென ஒரு பேச்சும் உள்ளது. அது கிடக்கட்டும். அசார் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டதை ICC கண்டனம் செய்துள்ளது. அதை எதிர்த்து பிந்த்ரா, மற்றும் பவார் குரல் எழுப்பியுள்ளனர். தடை நீக்கம் குறித்தும் விவாதிக்கப் போவதாக தெரிகிறது. பவார் கூறியதாவது:


அசார் இந்திய அணிக்கு பலவாறு திறம்பட கடமையாற்றியுள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவருக்கு எல்லா தகுதியும் உள்ளது.






ICC இந்திய அணியிடம் மட்டும் காட்டமாக நடந்து கொள்வதேன்? கலங்கம் சுமத்தப்பட்டு தடை செய்யப்பட்ட வீரர்கள் கிப்ஸ், வார்னே ஆகியோர் இப்போதும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அசார் இனிமேல் விளையாடப் போவதில்லை.





எது எப்படியோ, அசாரின் சாதனைகள் மகத்தானவை. அவர் இந்திய அணிக்கு ஆற்றிய தொண்டும் மகத்தானவையே. சிறந்த வீரர். அவருடைய அந்த லெக் ஃப்லிக் இன்று வரை எந்த ஆட்டக்காரராலும் பயிற்சியின் போது கூட செய்ய முடியாதவை. அவரின் பேட்டிங் ஸ்டைல் எதிரணி வீரர்களை கூட மயக்குபவை. அப்படி இருந்தவரின் இருந்தவரின் நிலை இன்று இப்படி. சோகமே, என்னைப் பொறுத்தவரை அவர் மேலுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாதவரை இந்த தடை பொருளற்றதே. அவரால் இனிமேல் இந்திய அணிக்கு விளையாட முடியுமா (தடை நீங்கி வாய்ப்பு கிடைக்குமா?) தெரியவில்லை (ஆனால் மனிதன் இப்போதும் அதே பெர்ஃபெக்ட் ஃபிட் தான்). அவருக்கு இந்திய கிரிக்கெட் தொடர்பானவற்றிலாவது அனுமதிக்க வேண்டும். என்ன சொல்கிறீர்கள்?


பின்பு, எனக்கு ஒரு வித்தியாசமான விருப்பம் ஒன்றுள்ளது. அதாவது, அசார் இதுவரை 99 (நாட் அவுட்) டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். அவருக்கு 100 போட்டி ஆடச்செய்து (ஏடன் கார்டனாக இருந்தால் சிறப்பு), அதே போட்டியில் நம்ம 'தல' கங்குலிக்கும் வாய்பளித்து, இருவருக்கும் சிறந்ததொரு பிரிவுபச்சார ஆட்டம் ஆடச்செய்து சிறப்பிக்க வேண்டும். இரண்டு வெற்றிகரமான தலைவர்களையும் சிறப்பித்தது போலாகிவிடும். என் விருப்பமும் நிறைவேறி விடும்.

Monday, October 02, 2006

என்ன தோன்றுகிறது??




மேலே உள்ள படத்தைப் பார்த்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். நான் இப்படத்தை பார்த்தவுடன் அலுவலகம் என்று கூட பாராமல் வாய்விட்டு சத்தமாக சிரித்து விட்டேன். எல்லாரும் என்னைப் பார்த்து முறைத்ததுதான் மிச்சம். (பின்பு எல்லாருக்கும் மின்னஞ்சல் அனுப்பி வைத்து விட்டேன்)

சிறந்த கமென்ட்... பரிசு... அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாதுங்க... சும்மா.. இதைப் பாத்து நீங்க என்ன் நினைக்கிறீங்கனு தெரிஞ்சுக்கத் தான். :) புகுந்து விளையாடலாம்.