Wednesday, September 27, 2006

நம்ம 23-ம் புலிகேசி Project Manager ஆனால்...

காலையில் ஒன்பது மணிக்கு வர வேண்டியது. கணிணியின் திரையைப் பார்த்துக் கொண்டே வேலை செய்வது போல் நடிக்க வேண்டியது. மாலையில் வீட்டிற்கு அடித்து புரண்டு ஓட வேண்டியது. இதில் இடையில் ஒரு மணி நேரம் உணவு இடைவேளை வேறு. அது மட்டுமின்றி இடையிடையில் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் தேனீர் அருந்த ஓய்வு நேரம். கூடவே டோர்ம் (Dorm) - ல் உறங்க நாற்பது நிமிடங்கள் சென்று விடும். ஐந்தறிவு ஜீவன்கள் போல் ஒரு வாழ்க்கை. Deadline வந்தால் மட்டுமே ஆறாவது அறிவிற்கு வேலை. கேட்டால் மென்பொருள் நிறுவனத்தில் வேலை என்று பீற்றிக்கொள்வது.


(நண்பனிடம் இருந்த வந்த மின்னஞ்சலில் சிக்கியது)

Monday, September 25, 2006

உலக வெப்பநிலை உயர்வால் (Global Warming) மெரினாவுக்கு ஆபத்தா?

ஆம் என்றே தோன்றுகிறது இந்த இணையத்தளத்தின் கணிப்புப் படி. உலக வெப்ப நிலை உயர்ந்தால் கடல் மட்டம் 7 மீட்டர் அளவு வரை உயரும் என்று ஆய்வாளர்களால் அறியப்படுகிறது. அவ்வாறு நிகலுமாயின் உலகின் நிலப்பரப்பில் எந்த அளவிற்கு கடல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த தளம் கணித்து அதற்கேற்ப நீல வண்ணத்தை பாதிக்கப்படும் இடங்களாக காட்டுகிறார்கள்.

கீழே சென்னை நகரத்தின் படம்.

Photobucket - Video and Image Hosting

எனது ஊர் கடற்கரையிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. இதன் கூற்றுப்படி பார்த்தால் எங்கள் ஊருக்கு அழகான (?!) கடற்கரை கிடைக்கும் என நினைக்கிறேன். நீங்களும் இத்தளத்தினுள் விரைந்து சென்று உங்கள் வீடு பாதுகாப்பாக இருக்குமா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். மெரீனாவிற்கு ஆபத்து என்றே தோன்றுகிறது. மெரீனா முழுவதும் கடலினுள் செல்லும் வாய்ப்பு உள்ளது. எழும்பூரில் வசிப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி. உங்களுக்கு அழகான கடற்கரை பார்த்தாற் போன்ற வீடு அமைய வாய்ப்புள்ளது.

link: http://flood.firetree.net/

Wednesday, September 20, 2006

ஹய்யா!!! பொழப்பு மணக்கிறது...:)

(முன் குறிப்பு: 'ஐயகோ!! பொழப்பு நாறிக்கொண்டிருக்கிறது' என்றிருந்த தலைப்பு எதிர்பாராத முடிவால் மாற்றப்பட்டுள்ளது.)


நான் பயந்தது போலவே நடந்து கொண்டிருக்கிறது. ஆம், இந்திய அணி தற்போதய நிலையில் 73/5 (17.5 ov) என்ற பரிதாப நிலையில் தத்தளித்து கொண்டிருக்கிறது.

எனக்கு ஒன்று மட்டும் விளங்கவே இல்லை. இந்த தொடக்க ஆட்டக்கார இடமானது எல்லாருக்கும் தெரியும் அதிரடி வீரர்களுக்கென்றே பெயர் போனது. உதாரனமாக: ஜெயசூர்யா, கலுவிதரனா, சச்சின், கங்குலி, சேவாக், கில்க்ரிஸ்ட், அஃப்ரிடி. அது போல் இந்த உலகிற்கே தெரியும் இந்திய அணியின் மெதுவாக ரண் குவிக்கும் வீரர் (குறை சொல்லவில்லை) நம்ம ட்ராவிட் என்று. பினு ஏன் அவர் மீண்டும் மீண்டும் ஆட்டத்தை தொடக்குகிறார் என்று எனக்கு பிடிபடவே இல்லை. அவரின் இந்த அனுகுமுறை பற்றி யாருக்குமேனும் அறிந்து இருந்தால் தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்களேன்.

Sunday, September 17, 2006

கிரிக்கெட்: பொழப்பு நாறாம இருந்தா சரிதான்

நம்ம ஆளுங்களுக்குத் தான் கிரிக்கெட் பத்தி பேசுரதுன்னா போதுமே. நாலு நாளைக்கு கஞ்சி தண்ணி இல்லாமக் கூட இருந்த இடத்துல சீட்டு தேயுர வரைக்கும் (நானும்தாங்கோ) பேசுவானுங்க. இப்போ நடந்துக்கிட்டு இருக்கும் கோலாலம்பூர்ல (பேருல ஏதோ அமெரிக்கா சதி மாதிரி தெரியுதுல்ல? ... இருக்கட்டும் அதைப் பத்தி அப்புறம் விசாரிக்கலாம்) நடக்கும் முத்தரப்பு போட்டியை பத்தி விளாவாரியா அரட்டை அடிக்கலன்னா எப்படிங்க. அதான் ரெண்டு மூனு பேரு எழுதுராங்கல்ல உனக்கென்ன லொடுக்குன்னு சொல்ரீங்கலா? நம்ம நாட்டுல கிரிக்கெட்டுக்கு இருக்குர மவுசுல ரெண்டு மூனெல்லாம் பத்தாதுங்கோ.. அதான் நானும் இங்க...


நம்ம டீம் போகும் போதே சச்சின் பேரைச் சொல்லி படங்காட்டிடுத் தான் போச்சுங்க. படங்காட்டுன மாதிரி நம்மாளு அடிக்கத்தாஞ் செஞ்சான். ஆனா பாருங்க அவரு அடிச்சாலே டீம் வெளங்காதுன்னு என்னோட கூட உள்ளவனுங்க சொன்ன மாதிரி ஆகி போச்சு. அட முடிவை நம்ம ஆட்களுக்கு ஏத்துக்குற பக்குவம் போதாதுங்க. மழை குறுக்க வந்து கெடுத்து புருச்சாம். அலுத்துக்கிறானுங்க. நான் சொன்னேன், அட போங்கப்பா சச்சின் அடிச்சதெல்லாம் சரிதான். ஆனா வெஸ்ட் இன்டீஸ் காரனுங்க கெடச்ச 20 ஓவர்ல நம்ம பந்துவீச்சாலர்களை பிரிச்சு மேய்ஞ்சாய்ங்க பாருங்க அதை மறுக்கா கூடாதுன்னு. என்னங்க நான் சொன்னது சரிதானே? என்ன கேட்டா, மழை வராம இருந்திருந்தா 40 இல்ல 45 ஓவர்லேயே அவனுங்க ஜெயிச்சுருப்பானுங்க. ஆமா.


அப்புறம். இந்த ரெண்டாவது ஆட்டம். அதுவும் ஜகஜால கில்லாடிங்க ஆஸ்திரேலியா கூட. கொஞ்சம் தொட நடுங்குர சமாச்சாரம் தான் (பின்ன ரொம்ப நாள் கழிச்சு, பந்த அளந்து பிசகாம வீசுர படுபாவி மெக்ராத் வந்துருக்கான்ல). செய்தியெல்லாம் ஒரே பரபரப்பு செய்தி 'சச்சின் - மெக்ராத் மீண்டும்' என்று. நான் மனசுக்குல்லேயே நெனச்சுக்கிட்டேன். இது அப்போ உள்ள சச்சின் இல்லன்னு. இப்போ உள்ள சச்சின் தரம் கொறஞ்ச பந்துவீச்சை மட்டும் தான் விளாசுவாரு. முன்ன மாதிரி இல்லன்னு. அதுவும் இந்த முறை சேஸிங் வேர. மெக்ராத் சச்சினுக்கு வீசுன மொத பந்தே ஹெல்மெட்ல. கொடுமட சாமி. பயங்காட்டுரானே நெனச்சா மீண்டும் மழை. சரி டார்கெட் தான் குறச்சாச்செ பசங்க சீக்கிரம் பயப்படாம அடிச்சுருவானுங்கன்னு நப்பாசை. கிழிஞ்சது போங்க. அந்த ஜான்ஸன் பய வந்து ஆட்டத்தையே கெடுத்துப்புட்டான். மட மடன்னு கம்பி நீட்டுரானுங்க நம்ம பசங்க. போச்சுடான்னு நெனச்சா மீண்டும் மழை. புள்ளிகள் பங்கீடு. என் கூட இருந்தவனுங்க இதை ஒரு வெற்றி மாதிரி கொண்டாடுரானுங்க. அட நாதாரிங்களா! இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு இந்த மழை வந்திருந்தா நாறிப் போயிருக்கும்டா நாறி. பொழப்பு சிரியா சிரிச்சுருக்கும். நம்ம ஆளுங்க ஆடுன ஆட்டத்தை நெனச்சு வருத்தப்படுவானுங்களா? கொண்டாடுரானுங்க. சே இதெல்லாம் ஒரு பொழப்பா!!!

சே! இந்த சாப்பல் எப்பத்தான் சோதனை முயற்சியை நிறுத்தப் போறாரோ! நமக்குத்தான் அதுவரை சோதனையா இருக்கும்.


என்னாமோ போங்க! நம்ம டீம் ஃபைனல் போகுதானு பாப்போம். யப்பா சாமிகளா கொஞ்சம் (நிறைய) நல்லா ஆடுங்கடா!!

Wednesday, September 06, 2006

கங்குலியும் சதுரங்கமும்

Photobucket - Video and Image Hosting

மீண்டும் ஒருமுறை கங்குலி எனும் பகடை இந்திய கிரிக்கெட் அரசியல் சதுரங்கத்தில் வெட்டப்பட்டுள்ளது.

ஆமாங்க, நான் ஒரு கங்குலி விசிறிதான். அதற்காக அவர் தான் உலகின் தலைசிறந்த வீரர் என்று சொல்லவில்லை (என்னைப் பொறுத்தவரை ட்ராவிட் தான் தற்போதய கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த வீரர்). ஆனால் அவரை கிரிக்கெட் அரசியலில் இறக்கிவிட்டு. பகடை காயாக்கி வேட்டயாடி விளையாடிக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டமே. இதில் இந்திய அணியின் தற்போதய பயிற்சியாளரும் அடக்கம். க்ரேக் சாப்பலின் நடவடிக்கைகள் அனைத்தும் முட்டாள் தனமாகவே உள்ளது (முட்டாள்களின் விளையாட்டு என்பதனாலா?). இன்றைய தேதி வரை அவர் சோதனை(experiment) மட்டுமே செய்து கொண்டிருக்கிறார். எப்போது சோதனை முடிந்து ஒரு முடிவுக்கு வரப் போகிறாரோ தெரியவில்லை. அவருக்கு உலகக் கோப்பை நெருங்கி வருகிறது என்பதை யாராவது நினைவுபடுத்தினால் புண்ணியாமய் போகும். ட்ராவிட் தொடக்க ஆட்டக்காரராம். என்ன எளவுப்பா அது. அவர் தான் முதுகெலும்பு. அதைப் பலிகட ஆக்கவா சோதனை முயற்சி.


ம்ம்ம். அதை விடுங்க. கங்குலி நீக்கப்பட்ட நேரத்தில் அப்படி என்ன மோசமாக ஆடினார் என்று தூக்கினார்கள்? அந்த நேரத்தில் அவர் கண்டிப்பாக சேவாக், சச்சின், கைஃப் விட நன்றாகத்தான் ஆடி இருந்தார். அவரது நீக்கம் முற்றிலும் அரசியல் என்பது நாடறிந்த உண்மை. அதன் பிறகு ஒரு வருட காலம் முற்றிலும் சீண்டக்கூட படவில்லை. கேட்டால், இளைஞர்களுக்கு முன்னுரிமை, ஃபீல்டிங்கில் அவர் வீக். அடப் பாவிகளா?? அப்போ நீங்க, சச்சின் மட்டும் முழுதகுதி இல்லாத போதும் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்? அதிலும் இந்த சச்சின் இருக்காரே சரியான உஷார் பேர்வழி. துனைக்கண்டங்களின் நடக்கும் தொடருக்கு மட்டும் 'நான் ஃபிட்' என்று அறிவித்து விடுவார். வெளியே என்றாலே கிலிதான் மச்சானுக்கு (தற்போதய சச்சினை மட்டுமே சொன்னேன்). ஆனால் அவர் காயங்களில் இருந்து மீண்டு வந்தால் நேரடியாக தேர்வாவார். உள்ளூர் போட்டிகளில் ஆடத்தேவையில்லை. மற்றவர்கள் கண்டிப்பாக ஆட வேண்டும். அதென்ன அப்படி? அவர் என்ன ட்ராவிட் மற்றும் கும்ப்ளே விட டெஸ்ட் போட்டிகளை வென்று தந்தாரா? இல்லை கங்குலி போல் ஒரு நாள் போட்டிகளை வென்று தந்தாரா? அவர் செய்தது எல்லாம் எக்கேடு (அணி) கெட்டாவது சொந்தா எண்ணிக்கை கூட்ட வேண்டும். கங்குலி ஒன்றும் சச்சினுக்கு (ஒரு நாள் போட்டிகளில்) குறைந்தவரில்லை என்பது கிரிக்கெட் அறிந்தவருக்கு தெரியும். அப்படி இருக்கும் போது ஏன் இரு வேறு அளவுகோல்கள்?

எது எப்படியோ? அணி வெல்ல வேண்டும் (உள் நாட்டில் மட்டுமில்லாமல்). DADA அணிக்கு திரும்ப வேண்டும். அந்த lofted Straight Sixes நாங்கள் மீண்டும் காண வேண்டும்.(விடுபட்டவை பின்னூட்டங்களில் அலசப்படும்.)

சித்திரம் பேசுதடி

டைம்ஸ் ஆஃப் இன்டியாவில் வெளியான சில கேளிச் சித்திரங்கள்.