Monday, July 30, 2007

எப்படி முடிந்தது இவர்களால்!!

கடந்த 20 ஆண்டுகளுகாகவே பாதிக்கப்பட்டு வரும் ஒரு நாடு. விடாத போரினால் கிழித்தெரியப்பட்டு நித்தம் பல இழப்புகளை சந்தித்து வரும் ஒரு நாடு. பொருளாதரத்திலும், அரசியலிலும் ஏன் அன்றாட வாழ்க்கை வாழ்வதிலும் கூட சீரழிவை சந்தித்துக்கொண்டிருக்கும் ஒரு நாடு. ஆனால், நேற்று ஜகார்த்தாவில் நடந்த ஆசிய கோப்பை கால்பந்து கோப்பையை வென்று சாதித்திருக்கிறது.

ஆம். இராக் -தான் இப்போதைய ஆசிய சாம்பியன் கால்பந்தில். சவூதி அரேபியாவுடனான நேற்றைய இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று சாதனை படைத்திருக்கிறது.

நேற்றிரவு ஷார்ஜாவிலிருந்து நான் துபை வந்துகொண்டிருந்த போது பல வண்டிகளில் இராக்கிய கொடி பறக்க இளைஞர்கள் கூச்சலிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். போரினால் பாதிக்கப்பட்டு சோகமிழைந்த அவர்களின் முகங்களில் சில நாட்களுக்காகவாவது அந்நாட்டு கால்பந்து அணியினர் மகிழ்ச்சியை வரவழைத்துள்ளனர்.


இந்தப் போட்டிகளில் பங்கேற்று கோப்பையை வெல்ல, ஒரு போரினால் அழிந்துகொண்டிருக்கும் ஒரு நாட்டினர் எத்தனை கஷ்டப்பட்டிருப்பார்கள். குண்டு வெடிப்புகள் தினசரி நிகழ்ச்சியாயிருக்கையில் எப்படி பயிற்சி செய்திருப்பார்கள்? பொருளாதரத்தில் அதர பாதளத்தில் கிடப்பவர்களுக்கு ஸ்பான்ஸர் தொல்லைகளை எப்படி சமாளித்திருப்பார்கள்? இன்னும் பல தொல்லைகளுக்கு இடையில் இந்த வெற்றி! எல்லாம் நாட்டின் மீதும் விளையாட்டின் மீதுமுள்ள வெறி. இந்திய விளையாட்டு வீரர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்.

வெற்றியை கொண்டாடும் வீரர்களும் மக்களும்.







வெல்டன் இராக்! வாழ்க விளையாட்டு!!!

Sunday, July 29, 2007

அமீரக தமிழ் வலைப்பதிவுகள்

எல்லாரும் எல்லா வலைப்பதிவுகளையும் வாசிப்பதில்லை. அவரவருக்கு ஒவ்வொரு ரசனைகள். ஒவ்வொரு விருப்பங்கள்.

அதுபோலவே எனக்கும். திரட்டிகளில் சுண்டி இழுக்கும் தலைப்புகளையோ, அதிகமாக பார்வையிட்ட இடுகைகளையோ, தெரிந்தவர்களின் இடுகைகளையோ மட்டுமே நானும் வாசித்து வருகிறேன். போதுமான நேரமின்மையும் இது போன்ற தெரிவிற்கு காரணம். இதுபோல், விருப்பமான பதிவுகளை இழக்க நேரிட மனமில்லாதவர்கள் பல ஃபீட் ரீடர்களை பயன்படுத்தி வருகிறார்கள். அதுபோல நானும் Page Flakes என்னும் ரீடரை பயன்படுத்தி வருகிறேன். இது ரீடராக மட்டுமில்லாமல் பன்முகங்களிலும் பயன்படுகிறது. நமக்கு தேவையான ஃபீட்-களுடன் அதில் பலரால் உருவாக்கப்பட்ட பலவிதமான Flakes-களையும் நாம் நமது பக்கங்களில் சேர்த்து கொள்ளலாம்.

அமீரகத்திலுள்ள பெரும்பான்மையான வலைப்பதிவர்களும் இப்போது தெரிந்தவர்களாகிவிட்டதால், அமீரக வலைப்பதிவுகள் அனைத்தையும் ஒரு பக்கத்தில் வரச்செய்து உங்களுடன் பகிர்ந்தும் கொண்டுள்ளேன். இதில் யாரேனும் அமீரக வலைப்பதிவரின் பதிவு இணைக்கப்படாமல் விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். மாற்றங்கள் தேவையென்றாலும் அமீரக நண்பர்கள் தெரிவிக்கவும்.

நேரமின்மை காரணமாக இதுபற்றி சுருக்கமாகவே எழுத முடிந்தது. Page Flakes-ல் உங்களது பக்கத்தை உருவாக்கி பயன்படுத்துவதில் உதவி தேவையெனில் தெரிவிக்கவும். எனக்கு தெரிந்ததை சொல்லித்தருகிறேன்.

Saturday, July 28, 2007

பாலபாரதியை மிஞ்சிய அபிஅப்பா:துபை பதிவர் சந்திப்பு

தல பாலபாரதிக்கு போட்டியாக அமீரகத்தில் உருவெடுத்திருக்கும் அபிஅப்பா, தான் மாநாடுகள் நடத்துவதில் தலையை மிஞ்ச வேண்டும் என்ற வெறியுடன் துவங்கியுள்ள 'வாரம் ஒரு சந்திப்பு' என்ற கொள்கையின்படி நேற்று துபையில் மாபெரும் வலைப்பதிவர் சந்திப்பை நடத்தி வெற்றியும் கண்டுள்ளார். இருபது நாட்களுக்குள் இரண்டு சந்திப்பு! இது வலையுலக வரலாற்றில் மைல் கல். இது போதாதென்று அண்ணாச்சி தாயகம் திரும்பியவுடன் (அதாங்க அவர் துபை திரும்பியவுடன்) அவருடைய ஒத்துழைப்புடன் 'பதிவர் ஒர்க் ஷாப்பும்' நடத்த திட்டமிட்டுள்ளார்.

* சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்த கராமா பூங்காவானது சிம்ரன் ஆப்பக்கடை, வீனஸ், அஞ்சப்பர், சரவணபவன் இப்படி பல உணவகங்கள் சூழ அமையப்பெற்றுள்ளது.

* 'ஜூலை துபை வெயிலில் திறந்தவெளியில் சந்திப்பா' என அனைவரும் பயந்ததில் தவறேதுமில்லை என்பது போல் இருந்தது வெயில்.

* 'காலம் தவறா காந்தியடிகள்' என்ற பட்டப்பெயருக்கு புதிதாக பொருந்தியுள்ள அபிஅப்பா சரியான நேரத்திற்கு வருவாரா என்ற சந்தேகத்துடன் குடும்பத்துடன் சென்ற எனக்கு இன்ப அதிர்ச்சியாக சென்ஷியுடன் முதல் வருகை தந்திருந்தார். நான் மூன்றாவது ஆளாக இணைந்து கொண்டேன்.

* பின்னர், அய்யனார் தனிமையில் வராமல் தம்பி & குசும்பனுடன் வந்து சேர்ந்தார். பெரிதும் எதிர்பார்கப்பட்ட மகேந்திரன் மிஸ்ஸிங். குசும்பனை பார்த்தால் இந்த பூனையும் பால் குடிக்குமா என்றிருக்கிறார்.

* பெனாத்தலார் கோபியுடன் வந்து சேர்ந்தார். இவர்களுடன் வருவதாக எதிர்பார்க்கப்பட்ட லியோ சுரேஷ் மிஸ்ஸிங். அய்யனாரும் குசும்பனும் ஆள் மாறாட்ட அறிமுகம் செய்து கொண்டனர் பெனாத்தலாருடன். அய்யனார் நடிப்பு சீன நடிகர் யுவான் ஷிங் ஜிங்-ஜை மிஞ்சுவதாக இருந்தது. பாவம் பெனத்தலார் நம்பி விட்டார்.

* பின்னர் சந்திப்பு நாயகன் 'சூடான் புலி' நாகை சிவா கையில் வெயிட்டுடன் வந்து சேர்ந்தார். 'துபை டூட்டி ஃப்ரீ' பையை பார்த்தவுடன் சாக்லேட் அயிட்டமாக இருக்குமோ என்று அபிஅப்பா ஜொல்லியதை என்னைத்தவிர யாரும் கவனிக்கவில்லை.

* பின்னர் ஜெஸிலா தனது குடும்பத்துடன் வந்து சேர்ந்தார்.

* இதற்கிடையே நாங்கள் ஒருவர் மாற்றி ஒருவர் போட்டி போட்டு அய்யனாரை கலாய்த்து கொண்டிருந்தோம். மனுஷன் ரொம்ப நல்லவர். எவ்வளவு கலாய்ச்சாலும் தாங்கி கொண்டார்.

* அப்போது ஒரு அனானி தூரத்திலிருந்து எங்களையெல்லாம் போட்டோ எடுத்து விட்டு (இட்லிவடையாரின் ஆள்?), தான் ஒரு அனானி என அறிமுகப்படுத்தி கொஞ்சம் இடவெளி விட்டு அமர்ந்து கொண்டார்.

* இறுதியாக எங்களுடன் சுல்தான் இணைந்து கொண்டார்.

* அய்யனார் தான் கொண்டுவந்திருந்த 'சங்க இலக்கிய' நூலை அபிஅப்பாவிடம் கொடுத்து தமிழை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல அடிக்கல் நாட்டினார். அபிஅப்பா அந்த நூலின் எடையை பார்த்து தலையணையாக உதவும் என்று பத்திரப்படுத்திகொண்டார்.

* பலவற்றை பேசிக்கொண்டேயிருந்தாலும், அய்யனாரை கலாய்க்கும் வாய்ப்பை மட்டும் யாரும் தவறவிடவில்லை. மின்னல் இல்லாமல் போனது பேரிழப்பாகவே இருந்தது. மின்னல் 'எங்கே பழி வாங்கும் விதமாக தனக்கு ஆப்பு தயார் செய்துள்ளார்களோ' என பயந்தே வரவில்லை என பேசிக்கொண்டனர்.

* இடையே தேநீர் அருந்திவிட்டு மீண்டும் தொடர்ந்தது அரட்டை. அரட்டையின் போக்கில் அடித்த வெயிலின் தாக்கத்தை சிறிதும் உணர்ந்திருக்கவில்லை.

* சந்திப்பை நிறைவு செய்யும் விதமாக சரவணபவனில் நுழைந்து அபிஅப்பாவிற்கு மனதார நன்றி சொல்லும் விதமாக வயிறார சாப்பிட்டோம். அபிஅப்பா மட்டும் எதையோ இழக்கப் போகும் பரிதவிப்புடன் (இடையிடையே பாக்கெட்டை தடவிப் பார்த்துகொண்டார்) காணப்பட்டார்.

* இறுதியாக நாகை சிவா தான் கொண்டு வந்திருந்த 'துபை டூட்டி ஃப்ரீ' பையை திறந்தார். எல்லாருக்கும் ஒரு நினைவுப்பரிசாக ஒரு சிங்கம் தந்தார். புலி சிங்கமானது.

இதோ சில புகைப்படங்கள்:

புகைப்பட போட்டிக்கு தனது படத்தை அனுப்பச்சொல்லி அடம்பிடித்த அபிஅப்பா



சிறந்தது எது? அப்பக்கடையா? சரவணபவனா? (அபிஅப்பா & கோபி) என்ற விவாத்ததில்.



கலந்துகொண்ட அனானிகள்.


சூடான் புலி தந்த சிங்கம்.



முழுதும் வலைப்பதிவர் சந்திப்பாக மட்டும் இல்லாமால் நண்பர்கள் கூட்டமாக அமர்ந்து அரட்டையடித்த உணர்வே எனக்கிருந்தது.

கலந்து கொண்டு சிறப்பித்த எல்லாருக்கும் என்னுடைய நன்றி.

Wednesday, July 18, 2007

புகைப்பட போட்டிக்கு...

புகைப்பட போட்டி அறிவிச்சவுடனே எல்லாரும் கடகடன்னு போட்டில இறங்கிட்டாங்க. நாம சும்மா இருந்தா தமிழ் கூறும் நல்லுலகம் நம்மை இகழுமே. அந்த ஒரே காரணத்திற்காக நானும் பங்கெடுக்கிறேன். நான் அப்பப்ப சுட்டு வச்சதை இங்க பரிமாறுகிறேன். போட்டிக்கு ரெண்டே ரெண்டுதான் அனுப்பனுமாமே? இருந்தாலும் போனஸா ரெண்டு அவங்களுக்கு நான் அனுப்புறேன்.


இது ஓமன்(Omen) நாட்டிலுள்ள கஸ்ஸப் (Qasssab) என்ற அழகான ஊருக்கு சென்ற போது வண்டியை ஓட்டியவாறே எடுத்தது (Thru front wind sheild).



இது துபையில் பாலைவனத்தை சுத்திப்பார்த்த போது எடுத்தது. பாலையும் கூட அழகுதான் இல்லை?



கஸ்ஸப்-ல் சிறு சிறு தீவுகளுக்கிடையே படகில் ஊர்ந்த போது எடுத்தது.




இதுவும் இயற்கைக்குள் அடங்குமானால் போட்டிக்கு எடுத்துக்கொள்ளவும்.

ஒரு நாட்டின் அதிபர்!




Sunday, July 08, 2007

உலகையே உருக்கும் படம்

ஆம். இந்த படத்திலுள்ளவர்தான் நெடுங்காலமாக உலகை உருக்கிவருகிறார். :)

இதன் அற்புதமான க்ளோஸ்-அப் காட்சியை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அருமையாக படம்பிடித்து வெளியிட்டுள்ளனர். பாருங்கள் எவ்வளவு அழகா இருக்குன்னு. நேருக்கு நேரா இந்த மாதிரி பார்க்க முடியுமா? எப்படித்தான் இவ்வளவு நெருக்கமான தோற்றத்தை தருமளவு படம் புடிக்கிறாய்ங்களோ! வளர்க அறிவியல்.




http://solarsystem.nasa.gov/multimedia/gallery/PIA03149.jpg

சூரியனின் வெளிப்புற வெப்பநிலை சுமார் 6000° C தானாம். ஆனால், உட்புறத்தின் வெப்பநிலை சுமார் 1,50,00,000° C. நமக்கு 40-50° C வெப்பத்துக்கே கண்ணை கட்டுது.

யப்பா சூர்யா, சூடாவுறதை கொஞ்சம் கொறச்சுக்கப்புடாதா??

Wednesday, July 04, 2007

இட்லிவடை யாரென்று தெரிந்துவிட்டது

இட்லிவடை. தென்னிந்திய உணவு வகைகளில் மட்டுமில்லாமல் தமிழ் பதிவுலகிலும் மிகவும் பிரபலமான் பெயர். சூடான அரசியல் செய்திகளுக்கு பெயர் போனவர். இவர் யாரென அறிந்து கொள்வதில் பலருக்கும் ஆர்வம் இருக்கிறது.

இப்போது அவர் யாரென்று தெரிந்து விட்டது. அவர் பெயர் ஆனந்த் கோபாலன். சிங்கப்பூரில் இருக்கிறார். அவரது ஆங்கில வலைப்பூவில் நான் பார்த்த தகவல்கள் இது. என்ன நம்ப முடியவில்லையா? இங்கே சென்று பாருங்கள்.

இன்று அவருடைய வலைப்பதிவு முகவரியை தட்டச்சும்போது 'idlyvadai' என்பதற்கு பதில் 'idlivadai' என்று தட்டிவிட்டேன். வந்து விழுந்தது மேற்சொன்ன ஆங்கில வலைப்பதிவு. :)

எல்லாரும் இடையிடையே புழுதிய கிளப்புறாங்களேன்னு நானும் என்னால முடிஞ்சதை செய்யுறேன். :))))
(யாருக்கு தெரியும் ஒரு வேளை இது நம்ம இட்லிவடையா கூட இருக்கலாம்!)

எங்கே எல்லாரும் ஒரு வெறியோட கிளம்பிட்டீங்க? நான் விடுறேன் ஜூட்ட்ட்ட்ட்ட்ட்ட்!!

Tuesday, July 03, 2007

மனிதர் உணர்ந்துகொள்ள இது மனித காதல் அல்ல...

கோவையில் அது ஒரு பிரபலமான பொறியியல் கல்லூரி. அந்த கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் அவனும் ஒரு ஜூனியர் பொண்ணும் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். ஒன்றாகவே ஊர் சுற்றி வருகின்றனர். அவனுக்கு கல்லூரி வாழ்க்கை முடியப்போகும் வருத்தமிருந்தாலும் அவனுக்கு அதே ஊர்தான் என்பதால் அந்த வருத்தம் அவனை பெரிதாக பாதிக்கவில்லை.

அவனுடைய இறுதியாண்டும் நிறைவடைந்து விட்டது. அவனும் வேலை தேடி அலைந்து, இறுதியில் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக வேலை கிடைக்கிறது. அவளைப் பிரியப்போகும் துயரம் அவனையும், அவனை பிரியப்போகும் துயரம் அவளையும் வாட்டுகிறது. இருவரும் தத்தமது பெற்றோரிடம் பேசி தங்களது திருமணத்திற்கும் சம்மதம் பெறுகின்றனர். அவன் அமெரிக்க போய் ஒர் ஆண்டு கழித்து திரும்பி வந்ததும் திருமணம் என்பதாக முடிவெடுக்கப்படுகிறது.

அமெரிக்கா செல்லும் நாளில் அவன் அவளுக்கு அன்பளிப்பாக ஒரு 'செல்பேசி' வாங்கி கொடுக்கிறான். அந்த செல்பேசி எப்போதும் அவளுடனே இருக்க வேண்டும் என அன்பு கட்டளையும் இடுகிறான். அவனும் பிரியா விடை பெற்று அமெரிக்கா பறந்து செல்கிறான். அவன் அங்கு சென்ற பின் இருவருக்குள்ளும் காதல் அந்த செல்பேசி மூலமாக மேலும் வளர்கிறது.

ஒருநாள், இதையெல்லாம் அறிந்த தோழி ஒருத்தியுடன் சாலையை கடக்க முயற்சி செய்த அவள் கண்மூடித்தனமாக வந்த லாரியில் அடிபட்டு வீழ்கிறாள். சிகிச்சை பலனளிக்காமல் அவள் உயிர் மருத்துவமனையில் பிரிகிறது. இதை அறிந்தால் அவன் பைத்தியமாகிவிடுவான் என பயந்த இருவீட்டாரும் அவனிடம் இப்போதைக்கு இதை அறிவிக்க வேண்டாமென முடிவெடுக்கிறார்கள். அவன் நாடு திரும்பியதும் அவனிடம் பக்குவமாக எடுத்து சொல்லிக்கொள்ளலாம் என்பது அவர்களின் எண்ணம். அதற்கிடையில் அவளது உடலை சவப்பெட்டியில் அடைத்து மூட முயன்ற போது மூட முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் பலனில்லை. பாதிரியார், ஆச்சர்யத்துடன் கவலை கொள்கிறார். அவள் மிகவும் விரும்பிய பொருள் எதாவது இருந்தால் கொண்டு வாருங்கள் என பாதிரியார் சொல்ல, அந்த தோழி 'அவளுக்கு மிகவும் விருப்பமான் பொருள் இந்த செல்பேசி தான்' என அவளுக்கு அவன் வாங்கித்தந்த அந்த செல்பேசியை பாதிரியாரிடம் கொடுக்கிறார். அவரும், அதை சவப்பெட்டியில் வைத்து மூட அதுவும் மூடிக்கொண்டது. ஆச்சர்யத்தில் அனைவரும் வாய் பிளந்தனர்.

இரண்டு மாதங்கள் கழித்து அவன் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்புகிறான். வரவேற்க வந்த பெற்றோரை தன்வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு (அவள் இறந்ததை அவனது பெற்றோர்கள் சொல்லவில்லை) அவள் வீட்டிற்கு நேராக செல்கிறான் கையில் மலர்கொத்தோடு.

அவள் வீட்டினுள் நுழைந்ததும், அவள் பெயரை உரக்க கூவி அழைத்தவாறு அங்குமிங்கும் ஓடி தேடுகிறான். அவளது பெற்றோர்கள் திகைத்து நிற்கின்றனர் எப்படி இவனிடம் சொல்வதென்று தெரியாமல். அவர்களிடம் அவன், 'அவள் எங்கே?' என கேட்க. அவர்களும் தட்டு தடுமாறி அவள் விபத்தில் இறந்ததை கூறிகின்றனர். அதைக்கேட்ட அவன் பலமாக சிரிக்கிறான். 'என்ன உளறுகிறீர்கள்? அவள் இறக்கவில்லை. நேற்று வரை அவளுடன் செல்பேசியில் பேசினேன்' என சிரித்தவாறு கூறுகிறான். அவர்கள் விளக்க முயற்சிக்க, அவனோ அங்கிருந்து புறப்படும் வரை அவளுடன் பேசியதாக நம்ப மறுக்கிறான். அவர்களோ இதைக்கேட்டதும் குழப்பத்தில் அவனை சமாதானப்படுத்த முயற்சிக்க, அவன் அவளுடைய செல்பேசி எண்ணுக்கு டயல் செய்ய தொடங்கினான். அவளது பெற்றோர்களோ திகைத்து நிற்கின்றனர்.

காட்சி மாறுகிறது.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.

Sunday, July 01, 2007

சிவாஜியில் ஒரு குறை கண்டேன்

சிவாஜி. சமீபத்தில் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து ஆராயப்பட்ட ஒரு பெயர். இதைப்பத்தி நாமலும் ஒன்னும் சொல்லாம இருந்தால் ஜோதியில் ஐக்கியமாகாதவன் என்ற ஒரு அவப்பெயருக்கு ஆளாக நேரிடும் என்பதால் இந்த பதிவு.


நானும் இந்த படம் பார்த்துவிட்டேன். இந்த படத்தின் நிறை குறைகளை பலரும் சொல்லி ஓய்ந்து விட்டதால் நான் மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எல்லாரும் குறிப்பிட மறந்த(?!) ஒன்றை இங்கே சொல்கிறேன்.

இந்தப் படத்தில் நெடுகிலும் காண்பிக்கப்படும் பெயர் பலகைகளில் 'Sivaji' என்பதுதான் சிவாஜியின் ஆங்கில Spelling. அதாவது இயக்குனர் 'சிவாஜி' என்ற பெயருக்கு தந்த ஸ்பெல்லிங். ஆனால், ரஜினி தனது வீட்டை அடமானம் வைக்கும் காட்சியில் கையெழுத்திடும் போது 'Shivaji' என்று கையெழுத்திடுவார் (படம் பாக்கும்போது ரொம்ப தெளிவா இருப்போம்ல). சரி, ஏன் இந்த முரண்பாடு? இயக்குனர் பேச்சை ரஜினி கேட்கவில்லையா? அவர்களுக்குள் எனி ப்ராப்ளம்? ;)