Saturday, December 15, 2007

PIT: டிசம்பர் போட்டிக்கு - மலர்கள்

போட்டியின் தலைப்பு அறிவித்தவுடன் ஏற்கனவே சில மலர்கள் படங்கள் கைவசம் இருந்திருந்தாலும், புதிதாக எடுத்து போட்டிக்கு இடவேண்டும் என்ற முடிவுடன் கையும் பொட்டியுமாய் கடந்த 15 நாட்கள் கடந்தன. அதில் நிறைய படங்கள் சிக்கின. இருந்தாலும், போட்டிக்கு கீழ்கானும் இரண்டு மட்டும் :).



படம்:1



f-stop: f/3.5 , Exp: 1/160 sec , 13 mm (சொல்லிக்கொடுத்த PIT குழுவிற்கு நன்றி)

படம்:2


f/4 ; 1/50 Sec ; 6mm

================
கீழ்காணும் இந்த படம் ஒரு மாலைப்பொழுதில் எடுத்தது. இந்த மலர்களின் மீது மாலை கதிரவன் ஒளி பட்டி மலர்கள் மின்னியது. அதை படமாக்கி விட்டேன். படமும் நன்றாக வந்ததாகவே பட்டது. ஆனால், பின்னனியில் (Background) காணும் அந்த ஓலை தட்டி சிறிது உறுத்தலாக இருந்ததால் போட்டிக்கு அனுப்பவில்லை.


f/4.8 ; 1/20 sec ; 35 mm

போட்டிக்கான படங்கள் கடந்த முறை போல் பத்தில் ஒன்றாகவாவது வருமா?

Monday, November 12, 2007

PIT: நவம்பர் போட்டிக்கு - சாலைகள்

நவம்பர் மாத போட்டிக்கு தலைப்பு 'சாலைகள்' என்று அறிவிக்கப்பட்டதுமே பரணில் தூசு தட்டியபோது நிறைய படங்கள் கிடைத்தது. அதில் எதை போட்டிக்கு தள்ளிவிடலாமென்பதில் சிறிய குழப்பம் இருந்தது. இறுதியில் கீழுள்ள முதல் இரண்டு படங்களுக்கு PhotoShop மூலம் டச்சிங் கொடுத்து தேர்ந்தெடுத்துள்ளேன்.

படம் 1 : இந்தப்படம் ஓமனிலுள்ள கஸ்ஸப் (Khassab) என்னும் அழகிய ஊரில் எடுத்தது.



படம் 2: இது ஷார்ஜா புறநகர் பகுதியிலுள்ள ஒரு சிறிய மேம்பாலம்.




இனி என்னை குழப்பத்தில் ஆழ்த்திய மற்ற படங்கள் (போட்டிக்கு அல்ல):

படம் 3: படம் 4:
படம் 5:
மேலுள்ள இந்த மூன்று படங்களும் Khassab-ல் எடுத்ததுதான்.

படம் 6:

இது ஷார்ஜா பல்கலைக்கழக நகரினுள் நுழையும் சாலை.

Thursday, October 25, 2007

அணு ஒப்பந்தமும் காட்டுத்தீயும்


அமெரிக்கா-இந்தியாவுடனான ஒப்பந்தம் ஏற்படவேண்டும் என்பதற்காக கூறிய காரணங்களில் ஒன்று : இந்தியாவில் 70% ஆற்றல் நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படுவதால் சுற்றுப்புற சூழல் மாசுபடுகிறது. இதை இந்த ஒப்பந்தம் மூலம் தடுக்கலாம்.

அடடா! அமெரிக்காவிற்கு உலகத்தின் மீது என்ன ஒரு அக்கறை!!

ஆனால், அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் கடும் காட்டுத்தீ ஏற்பட்டு பல்லாயிரம் மைல்கள் அது பரவி சேதம் ஏற்படுத்துகிறது. இதனால் ஏற்படும் புகையினால் சுற்றுப்புற சூழல் மாசுபடவில்லையா? இயற்கை வளங்கள் ஏக்கர் கணக்கில் சீரழியவில்லையா? பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லையா? செவ்வாய்க்கே ராக்கெட் விடும் அமெரிக்காவிற்கு இதையெல்லாம் தடுத்த நிறுத்த வழி செய்ய முடியாதா இல்லை தெரியலையா? முடியவில்லையெனில், இந்த காட்டுத்தீ ஏற்படாமல் நாங்கள் கவனித்துக்கொள்கிறோம் என இந்தியா அமெரிக்காவிடம் ஒப்பந்தம் ஏற்பட பேரம் பேச வேண்டும். :)

என்னமோ போங்க, ஊருக்குத்தான் உபதேசம்.... என்ற பழமொழி ஞாபகத்திற்கு வருகிறது.

Thursday, August 16, 2007

சொர்க்கமே என்றாலும்...

மக்களே!
இடைவிடாத அயராத பணியாலும், ஊருக்கு விடுமுறையில் செல்லவிருப்பதால் அடுத்தவர் தலையில் என்னுடய பணியை (பதிவுலகப்பணி நீக்கம்) ஏற்றிக்கொண்டிருந்ததாலும் தமிழ்மணம் பக்கம் வந்து ஏழெட்டு நாட்களாகி விட்டது. அதனால் என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்று கூட தெரியவில்லை.

சில இன்றியமையா செய்திகள் மட்டும் ப்ராக்ஸியின் மூலம் அறிந்து கொண்டேன். சில அமீரகப் பதிவர்கள் காமெடியில் கலக்கிக்கொண்டிருப்பதாகவும், சில அமீரகப்பதிவர்கள் கவிதை சிறுகதை என தாவு தீர வைத்ததாகவும் செய்திகள் செவிக்கு வந்தன. மற்ற எல்லா பதிவர்களின் இந்த இடைவெளியில் வாசிக்கத்தவறிய பல்தரப்பட்ட பதிவுகளையும் எல்லாவற்றையும் ஊருக்கு சென்றபின் பொறுமையா இருந்து வாசித்துக்கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

நான் ஊருக்கு செல்வதால் அய்யனார் 'இனி எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்னுடைய கலாய்ப்பு குறையும்' என அடர்கானகத்தில் தனிமையில் உரக்க கூவியதாக கேள்விப்பட்டேன். அய்யனாருக்கு ஒரு எச்சரிக்கை! எங்கு செல்லினும் பிரசுரிக்க முடியாத பின்னூட்டங்கள் உங்களை வந்தடைந்தே தீரும் :)



ஊருக்கு செல்வதென்றாலே இனம்புரியாத மகிழ்ச்சியில் மனம் இருக்கிறது. ஆயிரம்தான் இருந்தாலும் சொந்த ஊருக்கு செல்லும் ஏற்படும் மகிழ்ச்சியே மகிழ்ச்சிதான். இருக்காதா பின்ன? இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு செல்கிறேன். சிலர் 'நீங்கள் இங்கு குடும்பத்தோடுதானே இருக்கிறீர்கள். நான்காண்டு கழித்து கூட செல்லலாம்' என்கிறார்கள். அவர்களுக்கு அம்மா, அப்பா & உடன்பிறந்தோர் எல்லாம் குடும்பமாக தெரியவில்லை போலும். நாளை (வெள்ளிக்கிழமை) புறப்பட்டு ஊருக்கு செல்கிறேன். மீண்டும் அக்டோபர் முதல்நாள் பணிக்கு திரும்ப வேண்டும். அதற்கிடையில் பொழுது போகாத நேரமெல்லாம் தமிழ்மணம் வரும் எண்ணம் உள்ளது. :) ஊர் சுற்ற வேண்டிய வேலைகளும் உள்ளன.

பாலைவனத்தையே பார்த்து சலித்தவன் அழகான மழைக்காலத்தை எதிர்பார்த்து செல்கிறேன். எனக்காகவாவது வடகிழக்கு பருவமழை பொய்க்காமல் இருக்க வேண்டும். 'நல்லோர் ஒருவர் இருக்கும் பொருட்டு பெய்யும் மழை'ன்னு வேற சொல்லியிருக்காங்க பார்க்கலாம். வானம் பார்க்கும் முகவைச்சீமை என் வருகையாலாவது செழிக்கட்டும் :)).

அமீரகத்தில் தொலைதொடர்பில் சிக்காதவர்கள் இதையே நான் பயணம் சொன்னதாக எடுத்துக்கொள்ளவும்.

அமீரக நண்பர்களுக்கு Bye!
இந்திய நண்பர்களுக்கு Hai!!

Thursday, August 02, 2007

ஆகஸ்டு புகைப்பட போட்டிக்காக...

என்னையும் போட்டியில சேத்துக்குங்க. இதோ எனது இரண்டு புகைப்படங்கள்.


Monday, July 30, 2007

எப்படி முடிந்தது இவர்களால்!!

கடந்த 20 ஆண்டுகளுகாகவே பாதிக்கப்பட்டு வரும் ஒரு நாடு. விடாத போரினால் கிழித்தெரியப்பட்டு நித்தம் பல இழப்புகளை சந்தித்து வரும் ஒரு நாடு. பொருளாதரத்திலும், அரசியலிலும் ஏன் அன்றாட வாழ்க்கை வாழ்வதிலும் கூட சீரழிவை சந்தித்துக்கொண்டிருக்கும் ஒரு நாடு. ஆனால், நேற்று ஜகார்த்தாவில் நடந்த ஆசிய கோப்பை கால்பந்து கோப்பையை வென்று சாதித்திருக்கிறது.

ஆம். இராக் -தான் இப்போதைய ஆசிய சாம்பியன் கால்பந்தில். சவூதி அரேபியாவுடனான நேற்றைய இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று சாதனை படைத்திருக்கிறது.

நேற்றிரவு ஷார்ஜாவிலிருந்து நான் துபை வந்துகொண்டிருந்த போது பல வண்டிகளில் இராக்கிய கொடி பறக்க இளைஞர்கள் கூச்சலிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். போரினால் பாதிக்கப்பட்டு சோகமிழைந்த அவர்களின் முகங்களில் சில நாட்களுக்காகவாவது அந்நாட்டு கால்பந்து அணியினர் மகிழ்ச்சியை வரவழைத்துள்ளனர்.


இந்தப் போட்டிகளில் பங்கேற்று கோப்பையை வெல்ல, ஒரு போரினால் அழிந்துகொண்டிருக்கும் ஒரு நாட்டினர் எத்தனை கஷ்டப்பட்டிருப்பார்கள். குண்டு வெடிப்புகள் தினசரி நிகழ்ச்சியாயிருக்கையில் எப்படி பயிற்சி செய்திருப்பார்கள்? பொருளாதரத்தில் அதர பாதளத்தில் கிடப்பவர்களுக்கு ஸ்பான்ஸர் தொல்லைகளை எப்படி சமாளித்திருப்பார்கள்? இன்னும் பல தொல்லைகளுக்கு இடையில் இந்த வெற்றி! எல்லாம் நாட்டின் மீதும் விளையாட்டின் மீதுமுள்ள வெறி. இந்திய விளையாட்டு வீரர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்.

வெற்றியை கொண்டாடும் வீரர்களும் மக்களும்.







வெல்டன் இராக்! வாழ்க விளையாட்டு!!!

Sunday, July 29, 2007

அமீரக தமிழ் வலைப்பதிவுகள்

எல்லாரும் எல்லா வலைப்பதிவுகளையும் வாசிப்பதில்லை. அவரவருக்கு ஒவ்வொரு ரசனைகள். ஒவ்வொரு விருப்பங்கள்.

அதுபோலவே எனக்கும். திரட்டிகளில் சுண்டி இழுக்கும் தலைப்புகளையோ, அதிகமாக பார்வையிட்ட இடுகைகளையோ, தெரிந்தவர்களின் இடுகைகளையோ மட்டுமே நானும் வாசித்து வருகிறேன். போதுமான நேரமின்மையும் இது போன்ற தெரிவிற்கு காரணம். இதுபோல், விருப்பமான பதிவுகளை இழக்க நேரிட மனமில்லாதவர்கள் பல ஃபீட் ரீடர்களை பயன்படுத்தி வருகிறார்கள். அதுபோல நானும் Page Flakes என்னும் ரீடரை பயன்படுத்தி வருகிறேன். இது ரீடராக மட்டுமில்லாமல் பன்முகங்களிலும் பயன்படுகிறது. நமக்கு தேவையான ஃபீட்-களுடன் அதில் பலரால் உருவாக்கப்பட்ட பலவிதமான Flakes-களையும் நாம் நமது பக்கங்களில் சேர்த்து கொள்ளலாம்.

அமீரகத்திலுள்ள பெரும்பான்மையான வலைப்பதிவர்களும் இப்போது தெரிந்தவர்களாகிவிட்டதால், அமீரக வலைப்பதிவுகள் அனைத்தையும் ஒரு பக்கத்தில் வரச்செய்து உங்களுடன் பகிர்ந்தும் கொண்டுள்ளேன். இதில் யாரேனும் அமீரக வலைப்பதிவரின் பதிவு இணைக்கப்படாமல் விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். மாற்றங்கள் தேவையென்றாலும் அமீரக நண்பர்கள் தெரிவிக்கவும்.

நேரமின்மை காரணமாக இதுபற்றி சுருக்கமாகவே எழுத முடிந்தது. Page Flakes-ல் உங்களது பக்கத்தை உருவாக்கி பயன்படுத்துவதில் உதவி தேவையெனில் தெரிவிக்கவும். எனக்கு தெரிந்ததை சொல்லித்தருகிறேன்.

Saturday, July 28, 2007

பாலபாரதியை மிஞ்சிய அபிஅப்பா:துபை பதிவர் சந்திப்பு

தல பாலபாரதிக்கு போட்டியாக அமீரகத்தில் உருவெடுத்திருக்கும் அபிஅப்பா, தான் மாநாடுகள் நடத்துவதில் தலையை மிஞ்ச வேண்டும் என்ற வெறியுடன் துவங்கியுள்ள 'வாரம் ஒரு சந்திப்பு' என்ற கொள்கையின்படி நேற்று துபையில் மாபெரும் வலைப்பதிவர் சந்திப்பை நடத்தி வெற்றியும் கண்டுள்ளார். இருபது நாட்களுக்குள் இரண்டு சந்திப்பு! இது வலையுலக வரலாற்றில் மைல் கல். இது போதாதென்று அண்ணாச்சி தாயகம் திரும்பியவுடன் (அதாங்க அவர் துபை திரும்பியவுடன்) அவருடைய ஒத்துழைப்புடன் 'பதிவர் ஒர்க் ஷாப்பும்' நடத்த திட்டமிட்டுள்ளார்.

* சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்த கராமா பூங்காவானது சிம்ரன் ஆப்பக்கடை, வீனஸ், அஞ்சப்பர், சரவணபவன் இப்படி பல உணவகங்கள் சூழ அமையப்பெற்றுள்ளது.

* 'ஜூலை துபை வெயிலில் திறந்தவெளியில் சந்திப்பா' என அனைவரும் பயந்ததில் தவறேதுமில்லை என்பது போல் இருந்தது வெயில்.

* 'காலம் தவறா காந்தியடிகள்' என்ற பட்டப்பெயருக்கு புதிதாக பொருந்தியுள்ள அபிஅப்பா சரியான நேரத்திற்கு வருவாரா என்ற சந்தேகத்துடன் குடும்பத்துடன் சென்ற எனக்கு இன்ப அதிர்ச்சியாக சென்ஷியுடன் முதல் வருகை தந்திருந்தார். நான் மூன்றாவது ஆளாக இணைந்து கொண்டேன்.

* பின்னர், அய்யனார் தனிமையில் வராமல் தம்பி & குசும்பனுடன் வந்து சேர்ந்தார். பெரிதும் எதிர்பார்கப்பட்ட மகேந்திரன் மிஸ்ஸிங். குசும்பனை பார்த்தால் இந்த பூனையும் பால் குடிக்குமா என்றிருக்கிறார்.

* பெனாத்தலார் கோபியுடன் வந்து சேர்ந்தார். இவர்களுடன் வருவதாக எதிர்பார்க்கப்பட்ட லியோ சுரேஷ் மிஸ்ஸிங். அய்யனாரும் குசும்பனும் ஆள் மாறாட்ட அறிமுகம் செய்து கொண்டனர் பெனாத்தலாருடன். அய்யனார் நடிப்பு சீன நடிகர் யுவான் ஷிங் ஜிங்-ஜை மிஞ்சுவதாக இருந்தது. பாவம் பெனத்தலார் நம்பி விட்டார்.

* பின்னர் சந்திப்பு நாயகன் 'சூடான் புலி' நாகை சிவா கையில் வெயிட்டுடன் வந்து சேர்ந்தார். 'துபை டூட்டி ஃப்ரீ' பையை பார்த்தவுடன் சாக்லேட் அயிட்டமாக இருக்குமோ என்று அபிஅப்பா ஜொல்லியதை என்னைத்தவிர யாரும் கவனிக்கவில்லை.

* பின்னர் ஜெஸிலா தனது குடும்பத்துடன் வந்து சேர்ந்தார்.

* இதற்கிடையே நாங்கள் ஒருவர் மாற்றி ஒருவர் போட்டி போட்டு அய்யனாரை கலாய்த்து கொண்டிருந்தோம். மனுஷன் ரொம்ப நல்லவர். எவ்வளவு கலாய்ச்சாலும் தாங்கி கொண்டார்.

* அப்போது ஒரு அனானி தூரத்திலிருந்து எங்களையெல்லாம் போட்டோ எடுத்து விட்டு (இட்லிவடையாரின் ஆள்?), தான் ஒரு அனானி என அறிமுகப்படுத்தி கொஞ்சம் இடவெளி விட்டு அமர்ந்து கொண்டார்.

* இறுதியாக எங்களுடன் சுல்தான் இணைந்து கொண்டார்.

* அய்யனார் தான் கொண்டுவந்திருந்த 'சங்க இலக்கிய' நூலை அபிஅப்பாவிடம் கொடுத்து தமிழை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல அடிக்கல் நாட்டினார். அபிஅப்பா அந்த நூலின் எடையை பார்த்து தலையணையாக உதவும் என்று பத்திரப்படுத்திகொண்டார்.

* பலவற்றை பேசிக்கொண்டேயிருந்தாலும், அய்யனாரை கலாய்க்கும் வாய்ப்பை மட்டும் யாரும் தவறவிடவில்லை. மின்னல் இல்லாமல் போனது பேரிழப்பாகவே இருந்தது. மின்னல் 'எங்கே பழி வாங்கும் விதமாக தனக்கு ஆப்பு தயார் செய்துள்ளார்களோ' என பயந்தே வரவில்லை என பேசிக்கொண்டனர்.

* இடையே தேநீர் அருந்திவிட்டு மீண்டும் தொடர்ந்தது அரட்டை. அரட்டையின் போக்கில் அடித்த வெயிலின் தாக்கத்தை சிறிதும் உணர்ந்திருக்கவில்லை.

* சந்திப்பை நிறைவு செய்யும் விதமாக சரவணபவனில் நுழைந்து அபிஅப்பாவிற்கு மனதார நன்றி சொல்லும் விதமாக வயிறார சாப்பிட்டோம். அபிஅப்பா மட்டும் எதையோ இழக்கப் போகும் பரிதவிப்புடன் (இடையிடையே பாக்கெட்டை தடவிப் பார்த்துகொண்டார்) காணப்பட்டார்.

* இறுதியாக நாகை சிவா தான் கொண்டு வந்திருந்த 'துபை டூட்டி ஃப்ரீ' பையை திறந்தார். எல்லாருக்கும் ஒரு நினைவுப்பரிசாக ஒரு சிங்கம் தந்தார். புலி சிங்கமானது.

இதோ சில புகைப்படங்கள்:

புகைப்பட போட்டிக்கு தனது படத்தை அனுப்பச்சொல்லி அடம்பிடித்த அபிஅப்பா



சிறந்தது எது? அப்பக்கடையா? சரவணபவனா? (அபிஅப்பா & கோபி) என்ற விவாத்ததில்.



கலந்துகொண்ட அனானிகள்.


சூடான் புலி தந்த சிங்கம்.



முழுதும் வலைப்பதிவர் சந்திப்பாக மட்டும் இல்லாமால் நண்பர்கள் கூட்டமாக அமர்ந்து அரட்டையடித்த உணர்வே எனக்கிருந்தது.

கலந்து கொண்டு சிறப்பித்த எல்லாருக்கும் என்னுடைய நன்றி.

Wednesday, July 18, 2007

புகைப்பட போட்டிக்கு...

புகைப்பட போட்டி அறிவிச்சவுடனே எல்லாரும் கடகடன்னு போட்டில இறங்கிட்டாங்க. நாம சும்மா இருந்தா தமிழ் கூறும் நல்லுலகம் நம்மை இகழுமே. அந்த ஒரே காரணத்திற்காக நானும் பங்கெடுக்கிறேன். நான் அப்பப்ப சுட்டு வச்சதை இங்க பரிமாறுகிறேன். போட்டிக்கு ரெண்டே ரெண்டுதான் அனுப்பனுமாமே? இருந்தாலும் போனஸா ரெண்டு அவங்களுக்கு நான் அனுப்புறேன்.


இது ஓமன்(Omen) நாட்டிலுள்ள கஸ்ஸப் (Qasssab) என்ற அழகான ஊருக்கு சென்ற போது வண்டியை ஓட்டியவாறே எடுத்தது (Thru front wind sheild).



இது துபையில் பாலைவனத்தை சுத்திப்பார்த்த போது எடுத்தது. பாலையும் கூட அழகுதான் இல்லை?



கஸ்ஸப்-ல் சிறு சிறு தீவுகளுக்கிடையே படகில் ஊர்ந்த போது எடுத்தது.




இதுவும் இயற்கைக்குள் அடங்குமானால் போட்டிக்கு எடுத்துக்கொள்ளவும்.

ஒரு நாட்டின் அதிபர்!




Sunday, July 08, 2007

உலகையே உருக்கும் படம்

ஆம். இந்த படத்திலுள்ளவர்தான் நெடுங்காலமாக உலகை உருக்கிவருகிறார். :)

இதன் அற்புதமான க்ளோஸ்-அப் காட்சியை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அருமையாக படம்பிடித்து வெளியிட்டுள்ளனர். பாருங்கள் எவ்வளவு அழகா இருக்குன்னு. நேருக்கு நேரா இந்த மாதிரி பார்க்க முடியுமா? எப்படித்தான் இவ்வளவு நெருக்கமான தோற்றத்தை தருமளவு படம் புடிக்கிறாய்ங்களோ! வளர்க அறிவியல்.




http://solarsystem.nasa.gov/multimedia/gallery/PIA03149.jpg

சூரியனின் வெளிப்புற வெப்பநிலை சுமார் 6000° C தானாம். ஆனால், உட்புறத்தின் வெப்பநிலை சுமார் 1,50,00,000° C. நமக்கு 40-50° C வெப்பத்துக்கே கண்ணை கட்டுது.

யப்பா சூர்யா, சூடாவுறதை கொஞ்சம் கொறச்சுக்கப்புடாதா??

Wednesday, July 04, 2007

இட்லிவடை யாரென்று தெரிந்துவிட்டது

இட்லிவடை. தென்னிந்திய உணவு வகைகளில் மட்டுமில்லாமல் தமிழ் பதிவுலகிலும் மிகவும் பிரபலமான் பெயர். சூடான அரசியல் செய்திகளுக்கு பெயர் போனவர். இவர் யாரென அறிந்து கொள்வதில் பலருக்கும் ஆர்வம் இருக்கிறது.

இப்போது அவர் யாரென்று தெரிந்து விட்டது. அவர் பெயர் ஆனந்த் கோபாலன். சிங்கப்பூரில் இருக்கிறார். அவரது ஆங்கில வலைப்பூவில் நான் பார்த்த தகவல்கள் இது. என்ன நம்ப முடியவில்லையா? இங்கே சென்று பாருங்கள்.

இன்று அவருடைய வலைப்பதிவு முகவரியை தட்டச்சும்போது 'idlyvadai' என்பதற்கு பதில் 'idlivadai' என்று தட்டிவிட்டேன். வந்து விழுந்தது மேற்சொன்ன ஆங்கில வலைப்பதிவு. :)

எல்லாரும் இடையிடையே புழுதிய கிளப்புறாங்களேன்னு நானும் என்னால முடிஞ்சதை செய்யுறேன். :))))
(யாருக்கு தெரியும் ஒரு வேளை இது நம்ம இட்லிவடையா கூட இருக்கலாம்!)

எங்கே எல்லாரும் ஒரு வெறியோட கிளம்பிட்டீங்க? நான் விடுறேன் ஜூட்ட்ட்ட்ட்ட்ட்ட்!!

Tuesday, July 03, 2007

மனிதர் உணர்ந்துகொள்ள இது மனித காதல் அல்ல...

கோவையில் அது ஒரு பிரபலமான பொறியியல் கல்லூரி. அந்த கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் அவனும் ஒரு ஜூனியர் பொண்ணும் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். ஒன்றாகவே ஊர் சுற்றி வருகின்றனர். அவனுக்கு கல்லூரி வாழ்க்கை முடியப்போகும் வருத்தமிருந்தாலும் அவனுக்கு அதே ஊர்தான் என்பதால் அந்த வருத்தம் அவனை பெரிதாக பாதிக்கவில்லை.

அவனுடைய இறுதியாண்டும் நிறைவடைந்து விட்டது. அவனும் வேலை தேடி அலைந்து, இறுதியில் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக வேலை கிடைக்கிறது. அவளைப் பிரியப்போகும் துயரம் அவனையும், அவனை பிரியப்போகும் துயரம் அவளையும் வாட்டுகிறது. இருவரும் தத்தமது பெற்றோரிடம் பேசி தங்களது திருமணத்திற்கும் சம்மதம் பெறுகின்றனர். அவன் அமெரிக்க போய் ஒர் ஆண்டு கழித்து திரும்பி வந்ததும் திருமணம் என்பதாக முடிவெடுக்கப்படுகிறது.

அமெரிக்கா செல்லும் நாளில் அவன் அவளுக்கு அன்பளிப்பாக ஒரு 'செல்பேசி' வாங்கி கொடுக்கிறான். அந்த செல்பேசி எப்போதும் அவளுடனே இருக்க வேண்டும் என அன்பு கட்டளையும் இடுகிறான். அவனும் பிரியா விடை பெற்று அமெரிக்கா பறந்து செல்கிறான். அவன் அங்கு சென்ற பின் இருவருக்குள்ளும் காதல் அந்த செல்பேசி மூலமாக மேலும் வளர்கிறது.

ஒருநாள், இதையெல்லாம் அறிந்த தோழி ஒருத்தியுடன் சாலையை கடக்க முயற்சி செய்த அவள் கண்மூடித்தனமாக வந்த லாரியில் அடிபட்டு வீழ்கிறாள். சிகிச்சை பலனளிக்காமல் அவள் உயிர் மருத்துவமனையில் பிரிகிறது. இதை அறிந்தால் அவன் பைத்தியமாகிவிடுவான் என பயந்த இருவீட்டாரும் அவனிடம் இப்போதைக்கு இதை அறிவிக்க வேண்டாமென முடிவெடுக்கிறார்கள். அவன் நாடு திரும்பியதும் அவனிடம் பக்குவமாக எடுத்து சொல்லிக்கொள்ளலாம் என்பது அவர்களின் எண்ணம். அதற்கிடையில் அவளது உடலை சவப்பெட்டியில் அடைத்து மூட முயன்ற போது மூட முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் பலனில்லை. பாதிரியார், ஆச்சர்யத்துடன் கவலை கொள்கிறார். அவள் மிகவும் விரும்பிய பொருள் எதாவது இருந்தால் கொண்டு வாருங்கள் என பாதிரியார் சொல்ல, அந்த தோழி 'அவளுக்கு மிகவும் விருப்பமான் பொருள் இந்த செல்பேசி தான்' என அவளுக்கு அவன் வாங்கித்தந்த அந்த செல்பேசியை பாதிரியாரிடம் கொடுக்கிறார். அவரும், அதை சவப்பெட்டியில் வைத்து மூட அதுவும் மூடிக்கொண்டது. ஆச்சர்யத்தில் அனைவரும் வாய் பிளந்தனர்.

இரண்டு மாதங்கள் கழித்து அவன் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்புகிறான். வரவேற்க வந்த பெற்றோரை தன்வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு (அவள் இறந்ததை அவனது பெற்றோர்கள் சொல்லவில்லை) அவள் வீட்டிற்கு நேராக செல்கிறான் கையில் மலர்கொத்தோடு.

அவள் வீட்டினுள் நுழைந்ததும், அவள் பெயரை உரக்க கூவி அழைத்தவாறு அங்குமிங்கும் ஓடி தேடுகிறான். அவளது பெற்றோர்கள் திகைத்து நிற்கின்றனர் எப்படி இவனிடம் சொல்வதென்று தெரியாமல். அவர்களிடம் அவன், 'அவள் எங்கே?' என கேட்க. அவர்களும் தட்டு தடுமாறி அவள் விபத்தில் இறந்ததை கூறிகின்றனர். அதைக்கேட்ட அவன் பலமாக சிரிக்கிறான். 'என்ன உளறுகிறீர்கள்? அவள் இறக்கவில்லை. நேற்று வரை அவளுடன் செல்பேசியில் பேசினேன்' என சிரித்தவாறு கூறுகிறான். அவர்கள் விளக்க முயற்சிக்க, அவனோ அங்கிருந்து புறப்படும் வரை அவளுடன் பேசியதாக நம்ப மறுக்கிறான். அவர்களோ இதைக்கேட்டதும் குழப்பத்தில் அவனை சமாதானப்படுத்த முயற்சிக்க, அவன் அவளுடைய செல்பேசி எண்ணுக்கு டயல் செய்ய தொடங்கினான். அவளது பெற்றோர்களோ திகைத்து நிற்கின்றனர்.

காட்சி மாறுகிறது.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.

Sunday, July 01, 2007

சிவாஜியில் ஒரு குறை கண்டேன்

சிவாஜி. சமீபத்தில் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து ஆராயப்பட்ட ஒரு பெயர். இதைப்பத்தி நாமலும் ஒன்னும் சொல்லாம இருந்தால் ஜோதியில் ஐக்கியமாகாதவன் என்ற ஒரு அவப்பெயருக்கு ஆளாக நேரிடும் என்பதால் இந்த பதிவு.


நானும் இந்த படம் பார்த்துவிட்டேன். இந்த படத்தின் நிறை குறைகளை பலரும் சொல்லி ஓய்ந்து விட்டதால் நான் மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எல்லாரும் குறிப்பிட மறந்த(?!) ஒன்றை இங்கே சொல்கிறேன்.

இந்தப் படத்தில் நெடுகிலும் காண்பிக்கப்படும் பெயர் பலகைகளில் 'Sivaji' என்பதுதான் சிவாஜியின் ஆங்கில Spelling. அதாவது இயக்குனர் 'சிவாஜி' என்ற பெயருக்கு தந்த ஸ்பெல்லிங். ஆனால், ரஜினி தனது வீட்டை அடமானம் வைக்கும் காட்சியில் கையெழுத்திடும் போது 'Shivaji' என்று கையெழுத்திடுவார் (படம் பாக்கும்போது ரொம்ப தெளிவா இருப்போம்ல). சரி, ஏன் இந்த முரண்பாடு? இயக்குனர் பேச்சை ரஜினி கேட்கவில்லையா? அவர்களுக்குள் எனி ப்ராப்ளம்? ;)

Thursday, June 28, 2007

இதுல இம்புட்டு மேட்டர் இருக்கா?

நல்ல வேளை இந்த பழக்கம் இதுவரை எனக்கு இல்லைங்க. கல்லூரிக்காலத்தில் கூட சுத்தி இருந்தவங்க எத்தைனையோ பேரை வலைச்சு போட்ட இந்த புகை பழக்கத்திற்கு என்னமோ தெரியல என்னை புடிக்காம போயிருச்சு. தப்பிச்சேன்.

நேத்து நண்பன் ஒருத்தன் ஒரு மெயிலை அனுப்பி வைச்சான். 'சிகெரெட்டிற்குள் என்னென்னவெல்லாம் இருக்கு பாரு'ன்னு. பார்த்த எனக்கு அதிர்ச்சி தாங்க. உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் எனக்கு இதுக்குள்ள இத்தனை சனியனுங்க ஒளிஞ்சிருக்குன்னு சத்தியமா தெரியாதுங்க. நான் நினைச்சதெல்லாம் சிகெரெட்டிற்குள்ள நிகோடின் மட்டுந்தான் இருக்கும்னு.



எல்லாரும் அறிவுரை சொல்லுவாங்க புகை பிடித்தால் ஆயுள் குறையும் என்று. என்னங்க ஒரு ரெண்டு மூனு வருடம் குறையுமா? அதெல்லாம் பெருசே இல்லைங்க. ஆனால், இருக்குறவரைக்கும் இதுனால வரும் கடுமையான நோயில்லாமல் (அடுத்தவங்களை தொல்லை பண்ணாம) போகலாம்ல. என்ன சொல்றீங்க? இனிமேலும் இந்த சிகெரெட்டிற்கு என்னை பிடிக்காமல் இருக்க வேண்டும். நீங்க எப்படியோ, அது உங்க விருப்பம் :).

Wednesday, June 27, 2007

Desert Safari - நாங்களும் படம் காட்டுவோம்ல

கடந்த டிசம்பர் 31-ந்தேதி கடும் குளிர் நேரத்தில் நான் குடும்பத்துடன் டெஸர்ட் ஸஃபாரி சென்றது ஜெஸிலாவின் நேற்றைய பதிவை பார்த்தவுடன் ஞாபகம் வந்தது. எனது 9 ஆண்டு துபை வாழ்க்கையில் அதுதான் நான் சென்றிருந்த முதல் பாலைவனப் பயணம். மீண்டும் மீண்டும் செல்லத்தூண்டும்படி அமைந்தது. அதற்குப் பின் இதுவரை வாய்ப்பு அமையவில்லை. வாய்ப்புகளை உருவாக்கவேண்டும் இனி. அப்படியொரு புது விதமான அனுபவம் அது. அதை உங்களுடன் சொற்களால் பகிர்ந்துகொள்வதை விட எனது கேமராவில் பதிந்து வைத்ததை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. ஜெஸிலாவின் நேற்றைய பதிவிலேயே அதைப் பற்றி நிறைய தகவல்கள் அறிய கிடைப்பதால் நான் படம் காட்டுவதோடு நிறுத்திக்கொள்கிறேன். (படம் காட்டுறதுலதான் நாம கில்லாடியாச்சே). புகைப்படம் எடுப்பதிலும் கொஞ்சம் ஆர்வம் அதிகம். அதுவும் ஒரு காரணம்.

அமீரகத்தில் இல்லாதவர்களுக்கு கொஞ்சம் எளிதில் புரிந்து கொள்வதற்காக 'கூகிள் புவி'யின் படத்துடன் தொடங்குவோம் பயணத்தை.

இதோ, கீழே இருக்கும் படத்தில் இடது புறம் கடலோரம் இருப்பது தான் துபை. (அப்பாடா ஒரு வழியா பைசா செலவில்லாம துபையை பார்த்த திருப்து கிடைச்சிருக்குமே?). Palm Island & The World எல்லாம் தெரியுதா? வலது புறம் வட்டமிட்டு காட்டப்பட்டிருக்கும் இடம்தான் நாங்கள் சென்ற பாலைவனம். இது துபை-ஹத்தா சாலையில் அமைந்துள்ளது. துபையில் இங்கு செல்ல அதிகபட்சம் அரை மணி நேரம் பிடிக்கும்.




மேலே வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள பாலைவனத்தின் க்ளோஸ்-அப் மீண்டும் கூகிள் உதவியுடன் கீழே. எப்படி இருக்கிறது பாருங்கள். மண் கடல்.
இதற்குள்தான் பயணம். ஒரு த்ரில்லிங் அனுபவம் தான். அதிலும் எங்களுக்கு கிடைத்த ஓட்டுனர் போல திறமை வாய்ந்தவர் அமைந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.




வீட்டு வாசலுக்கே வந்து கூட்டிச்சென்றார்கள். வீட்டிலிருந்து கிளம்பும் போதே அந்த ஓட்டுனர் வயிற்றில் புளியை கரைத்தார். இருந்தாலும், 'இது பனங்காட்டு நரி, இந்த சலசலப்பிற்கெல்லாம் அஞ்சாது' என்பதை போல முகத்தை வைத்துக்கொண்டேன். அரை மணி நேரப் பயணத்திற்குப் பின் கீழுள்ள இடத்தை அடைந்தோம். அங்கு சிறிது இளைப்பாறிக்கொள்ள சொன்னார்கள். அப்புறம் தான் தெரிந்தது நாங்கள் மட்டுமல்ல (நாங்கள் சென்ற வண்டி மட்டுமல்ல) அதே சுற்றுலா நிறுவனத்தை சார்ந்த மேலும் 4 வண்டிகள் நின்றுகொண்டிருந்தன. எல்லா வண்டிகளுக்கும் டயரிலிருந்து காற்றளவை குறைத்தார்கள். அப்போதுதான் பாலவனத்தில் வண்டி எளிதாக செல்லுமாம். பின்னர் அங்கிருந்து ஸஃபாரி தொடங்கியது. அப்போதே எனக்கு என் கையிலிருந்த எனது ஒன்றரை வயது குழந்தையை பற்றி கவலை வந்துவிட்டது. பயந்துவிடுவாளோ என்று. ஆனால் உண்மையில் பயந்தது அவளை தவிர மற்ற யாவரும் தான். She enjoyed a lot. அதிலும் வந்ததிலேயே எங்கள் வண்டி ஓட்டுனர் தான் கேப்டன். அவரை பின்பற்றித்தான் மற்ற 4 வண்டிகளும் வந்து கொண்டிருந்தன.




பயணத்தின் போது பாலைவனத்தின் அழகை ரசித்ததுடன், அதை படமாக்கவும் நான் தவறவில்லை. ஒரு கையில் குழந்தை மறு கையில் கேமரா. அதில் எடுத்த சில படங்களை கீழே காணலாம். கூட வந்த நண்பரின் மனைவி நண்பரை முறைத்து கொண்டே வந்தார். பின்புதான் தெரிந்தது அவர் கொண்டு வந்த கேமராவில் சார்ஜ் இல்லையென்று.


பாலைவனத்தில் நடுவில் எங்களுடன் தொலையும் மற்ற வண்டிகள்.

பாலைவன முகட்டில் அணிவகுக்கும் ஊர்திகளின் கண்கொள்ளா காட்சி.
முகத்தில் மண் வாரி அடிக்கும் (நல்ல வேளை கண்ணாடின்னு ஒன்னை கண்டுபிடிச்சாய்ங்க) Dune Bashing காட்சி இதுதான். என்னதான் கண்ணாடி இருந்தாலும் வண்டிக்கு உள்ளும் தூசி சிறிதாக வரத்தான் செய்தது.

சூரியன் மறையும் தருனத்தில் பாலைவனத்தின் அழகு.
துபை நகரத்தில் பேசி கும்மியடிக்க இடம் இல்லாதது போல் நடு பாலையில் அரபிகளின் மீட்டிங்.

யோவ் படம் காட்டுனது போதும்யா என்று சைகையுடன் எனது மகள்.


குதூகலத்தில் சுற்றி வரும் கார்களும், பைக்குகளும்.

ஒரு வீடியோ காட்சி.




ஒரு இடத்தில் கூட வந்த மற்றொரு வண்டி மண்ணில் புதைந்து மாட்டிக்கொள்ள, இழுத்து உதவி செய்யும் எமது வண்டி.
இவர்தான் அந்த எமகாதக ஓட்டுனர். ஓவ்வொரு இடத்திலும் தன்னால் முடிந்த அளவு எங்களுக்கு வயிற்றில் புளி கரைத்த புண்ணியவான் இவர்தான். ரியல் சூப்பர்மேன். எங்களது வண்டியின் சாகசங்களை பார்த்து கூட வந்த மற்ற வண்டியின் பயணிகள் பொறாமைப்பட வைத்தவர். ஹீரோ.

இவையெல்லாம் முடிந்து இருட்டியவுடன் முகாமிற்கு கொண்டு சென்றார்கள். அங்கு பெல்லி ஆட்டம் மற்றும் இரவு சாப்பாடு. அன்று விடிந்தால் 2007 பிறக்கிறது என்பதால் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருந்தார்கள். குளிர் அதிகமாக (கொடுமையான குளிர்) இருந்ததால் எப்படா சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு போய் தூங்கலாம் என்றிருந்தது. புகை படம் எடுக்கும் நிலமை கூட இல்லை அந்த குளிரில். சாப்பாட்டிற்கு அழைத்தார்கள். சுட்ட கறி வகைகள் சுவையாகத்தான் இருந்தது. சாப்பிட்டுவிட்டு வீடு கிளம்பினோம். வீட்டில் எங்களை இறக்கிவிட்டு கிளம்ப இருந்த ஓட்டுனரிடம் 'நீதான் உண்மையான சூப்பர்மேன்' என்றவுடன் வெட்கம் கலந்த சிரிப்புடன் அதே வேகத்தில் சென்றார் அந்த பலுச்சிஸ்தான்காரர்.

Sunday, June 24, 2007

சுனிதா விண்வெளியில் பிரியாணி சாப்பிட்டாரா?

ஒரு வழியா அட்லாண்டிஸ் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிவிட்டது.விண்வெளிக்கு சென்றிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் ஆறு பேரும் வெற்றிகரமாக பூமி திரும்பிட்டாங்க. பூமிக்கு வெளியே 250 மைல்கள் தொலைவில் 188 நாட்களாக மிதந்து கொண்டிருந்தவர்கள் தாய்கோள் திரும்பிட்டாங்க. இந்தியா முழுதும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது சுனிதா வெற்றிகரமாக திரும்ப. அனனத்து மத பிரார்த்தனைகளும் இந்தியாவெங்கும் நடைபெற்றது. எங்கு பார்த்தாலும் சுனிதா சுனிதா சுனிதாதான். காரணம் அவர் இந்தியராம் (வம்சா வழியாம். அவரிடம் கேட்டால்தான் தெரியும் அவர் இந்தியரா அமெரிக்கரா என்று). இந்திய மக்கள் அவருடைய வருகைக்காக இறைவனை வேண்டியது குற்றமில்லைதான், ஆனால் அவருடன் சேர்ந்து வந்த மற்ற ஆறு பேரை பற்றி யாரும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. அவருடன் பயணித்தவர்கள் மனிதர்கள் இல்லையா? இல்லை இந்தியாவில் மற்ற நாட்டு மனித உயிர்களுக்கு மதிப்பில்லையா? (அவருடைய விண்வெளிச் சீருடையில் கம்பீரமாக அமெரிக்க கொடியை பொறித்திருக்கிறார் பாருங்கள்)




அவருடன் விண்வெளிக்குச் சென்றவர்கள்:


அதைப் பற்றி ரொம்ப பேசக்கூடாது. அப்புறம் குதர்க்கவாதியாகி முத்திரை முதுகில் குத்திடுவாங்க.

நம்ம மேட்டருக்கு வருவோம். சரி, விண்வெளிக்கு போறாங்களே அங்கே என்னதான் சாப்பிடுவாங்க? எப்படி சமைப்பாங்க? யாரு சமைப்பா? எங்கே சமைப்பாங்க? என்ற உயிரினங்களுக்கு இன்றியமையாத மேட்டரை பத்தி சந்தேகம் வந்துடுச்சு. நம்ம புத்தி எங்கே போகுது பாத்தீங்களா? நமக்கு ஈடுபாடு உள்ளதுலதானே நமக்கு கேள்விகள் எழும். அங்குள்ள எடை வேறுபாடு, ஈர்ப்பு விசை, அழுத்தங்கள் இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு திரவ உணவாகத்தான் இருக்கும் என நான் நினைத்திருந்தேன். நமக்கிருக்கிற மூளைக்கேத்தவாறுதானே நாம சிந்திக்க முடியும். சரி சந்தேகம் வந்தது வந்துருச்சு உடனே தீர்த்திடுவோம். சந்தேகம் பொல்லாத நோய் என்று சொல்றாங்களே பெரியவங்க. 'இணையம் இருக்க பயமேன்' என்று உடனே இணையத்தில் தேடும் வேலையில் ஈடுபட்டேன். முதலில் விண்களங்களின் படங்களை தேடியபோது சுனிதாவிற்கான விண்வெளி சாப்பாடு மெனு கிட்டியது (அவிய்ங்களும் நம்ம டேஸ்டை தெரிஞ்சு வச்சிருக்காய்ங்கப்பா. தேடலின் முதல் படமே சாப்பாட்டு மெனு). பார்த்தவுடன் அசந்தே விட்டேன். நீங்களும் பாருங்கள்.




அடடா! அடிபொலி சாப்பாடுங்க. சிக்கன், மாட்டுக்கறி, சூப், பழச்சாறுகள் இன்ன பிற. வெலுத்து கட்டியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். எங்கே போனாலும் நம்ம மனிதர்கள் சாப்பாட்டில் குறைவைப்பதில்லை போலும். விண்வெளியிலும் இங்கு என்ன சாப்பிடுகிறோமோ அதே உணவு வகைகளைத்தான் சமைத்து சாப்பிடுவார்களாம். இருந்தாலும், தான் ஐஸ்கிரீமை ரொம்ப மிஸ் பண்ணியதாக சுனிதா தெரிவித்ததாக ஒரு பண்பலை வானொலி காலையில் கூறியது. மெனுவைப் பார்த்தா ஐஸ்கிரிம் கிடைக்காட்டி என்ன அதான் நல்ல சாப்பாடு கிடைச்சிருக்கே என தோன்றியது. ஒவ்வொரு விண்வெளி வீரர்களும் தங்களுக்கு பிடித்த உணவை பயணம் முழுதும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாமாம். ஆனால், உணவுக் கட்டுப்பாட்டு மருத்துவரின் ஆலோசனையுடன்.

விண்களத்தில், (அதாவது விண்வெளிக்கு சென்றடைந்து ராக்கெட்டிலிருந்து விடுபட்டு வெளியில் மிதக்கும் போது தான் சமைக்க முடியும் என தெரிகிறது)சமைப்பதற்கென்று விண்களத்தின் நடுப்பகுதியில் ஒரு இடம் உள்ளதாம். அது Galley என்றழைக்கப்படுகிறது. அதில் hot and cold water dispensers, pantry, oven, food serving trays, personal hygiene station மற்றும் water heater ஆகியவை இருக்குமாம். விண்வெளி வீரர்களில் யாராவது ஒருவர் சமைப்பாராம். ஒரு மணி நேரத்தில் நான்கு பேருக்கான உணவு சமைத்துவிடலாமாம். அமெரிக்க உணவு வகைகள் சமைக்க அவ்வளவு நேரம்தான் ஆகும். நம்ம நாட்டு சாப்பாடுக்கு? அங்கே நம்ம நாட்டுக்காரங்க யாராவது போகும் போது பார்த்துக்கொள்ளலாம். என்ன சொல்றீங்க? கொஞ்ச நாள் வெளிநாட்டுல தங்கியிருந்தாலே அங்குள்ள 'வேக(வேகா?) உணவு'க்கு அடிமையாகிவிடும் நாம் விண்வெளிக்கு போனால் மட்டும் நம்ம நாட்டு உணவா உண்ணப்போகிறோம்?

ஆக மொத்தம் பொறி தட்டிய சிறிய சந்தேகத்தால் ஓரளவு(சிறிதளவாவது) விண்வெளி உணவு முறை பற்றி அறிந்து கொண்டேன். உங்களுடன் பகிர நினைத்தேன். விரிவாக எழுத வேண்டுமெனில் முழுதுமாக மொழியாக்கம் செய்ய வேண்டி வரும். நமக்கு அத்தனை திறமையில்லைன்னு உங்களுக்கும் தெரியும். ஆகவே மேலும் விபரங்கள் correct technical termsஸுடன் அறிய கீழே க்ளிக்குங்கள்.

ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக அறிந்துகொள்ள.

நீளமான விரிவான கட்டுரை.

அதெல்லாம் சரி, சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் பிரியாணி சாப்பிட்டாரான்னு கேக்குறீங்களா? மேலுள்ள மெனுவை பாத்தா அப்படி தெரியலைங்கோ. விடு ஜூட்!!

Tuesday, May 08, 2007

கவிதைகளில் ஆபாசம் ஏன்?

எனக்கு ஒரு சந்தேகம் இருக்குதுங்க. இது இன்னிக்கு நேத்து வந்த சந்தேகமில்லங்க நெடுங்காலமா இருக்குங்க. அது என்னன்னு கேக்குறீங்களா?

அதாவது, கட்டுரைகளில் யாராவது ஆபசமாக எழுதினால் எல்லாரும் வரிஞ்சு கட்டிக்கொண்டு வந்து எழுதினவரை உண்டு இல்லைன்னு ஆக்கிவிடுகிறோம். ஆனால், அதே மாதிரியான எழுத்துக்களை ஒருவர் கவிதையாக எழுதினால் மட்டும் சமூகம் கைதட்டி ரசிக்கிறது? அது ஏன்?

நமது வலைப்பதிவுகளிலேயே நான் இதை கண் கூடாக பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் யாரும் உடலுறவை பற்றியோ, மறைவான உடலுறுப்புகளை குறிக்கும் சொற்களை பயன்படுத்தியோ யாரும் கட்டுரையாக எழுதுவதில்லை. தவறி எழுதினாலும் சுட்டிக்காட்டப்படுகிறார் எழுதியவர். ஆனால், இங்கே (மட்டுமல்ல பொதுவாகவே) எழுதும் பல கவிதைகளில் சரளமாக உடலுறுப்புகளை பேச்சு வழக்கிலான சொற்களைப் பயன்படுத்தியே எழுதுவது, உடலுறவைப் பற்றி எழுதுவதை காணலாம்.

சில மாதங்களுக்கு முன் ஒரு பதிவர் முதலிரவில் நடக்கும் உறவைப்பற்றி விலாவாரியாக கவிதை என்ற பெயரில் எழுதியிருந்தார் (பதிவர் பெயர் மற்றும் அவருடைய வலைப்பதிவின் பெயர் எதுவும் ஞாபகமில்லை).அதற்கான பாராட்டுக்கள் குவிந்தன. பாராட்டியதோடு மட்டுமில்லாமல் சிலர் அந்த திருமணமாகாத பதிவருக்கு 'மனைவின் தேவையறிந்து / கேட்டறிந்து நடந்து கொள்ளுங்கள்' என்ற அறிவுரைகள் வேறு. கவிதைகளில் மட்டுமில்லை, கவிதை போன்ற நடையில் வரும் உரைநடைகளில் கூட இது போன்றவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இது பொல் முதலிரவில் நடப்பவற்றை ஒருவர் உரைநடையாக எழுதி பொதுவில் வைக்கமுடியுமா? மஞ்சள் பத்திரிக்கை என ஒதுக்கப்பட்டு விடாது? ஏன் இந்த இரட்டை நிலை?

கவிதை வடிப்பதற்கு கண்டிப்பாக தனித்திறமை பெற்றிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. கவிஞர்களுக்குள்ள கற்பனை வளத்தை கண்டு வியக்காதவர் யாருமிலர். ஆனாலும், இது போன்றவற்றை கவிதைகளில் எழுதுவதன் மூலம் என்ன தனித்துவம் வந்துவிடுகிறது. அதையும் சமூகத்தால் எப்படி பாராட்ட முடிகிறது? இப்படி எழுதுவது நாகரீகமல்ல என்பன போன்ற விமர்சனங்கள் அவைகளுக்கு பொருந்தாதது ஏன்?

இதுதாங்க எனக்குள்ள ஐயம். ஒருவேளை இதற்கான காரணங்கள் இருக்கலாம். அதை தெரிந்து தெளிந்து கொள்ளத்தான் இங்கு என்னுடைய ஐயத்தை பதிந்தேன்.

என்னைப்பொறுத்தவரை, இவ்வகையைச் சார்ந்தவற்றை எந்த வடிவில் எழுதினாலும் ஆபாசமே. இரண்டாம் தரமே.

Monday, May 07, 2007

துபை மெட்ரோ - கட்டுமானப்பணி புகைப்படங்கள்

துபையை ஒரு உலகத் தரம் வாய்ந்த நகரமாக்கும் முயற்சி இப்போது படும் மும்முரமாக நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக துபை மெட்ரோ இரயில் திட்டம் தொடங்கப்பட்டு வேலை வேகமாக நடைபெற்று வருகிறது. மெட்ரோ திட்டத்தில் ஆகாய இரயில் திட்டமும் (elevated), பாதாள இரயில் (underground) திட்டமும் அடங்கும். இது பற்றிய கூடுதல் விவரங்கள் அறிய இங்கே க்ளிக்குங்கள்.

இங்கே காணும் படங்கள் துபை பாதாள இரயில் திட்டத்தின் கட்டுமானப்பணிகளின் போது எடுக்கப்பட்டவையாகும். மனிதனின் முயற்சிகளுக்கு எல்லையில்லாமல் போய்விட்டது.

(நன்றி : மின்னஞ்சல் செய்தவருக்கு)